சென்னை,
புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக குஷ்பு பேசியதற்கு பலதரப்பில் இருந்தும் கண்டனம் கிளம்யியிருக்கிறது.
அதே பேட்டியில், “ பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு திரைப்படங்கள் காரணமல்ல” என்று பேசியதற்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித்தொடர்பாளர்  ஜோதிமணி.

ஜோதிமணி
ஜோதிமணி

இவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
“புதிய தலைமுறை தொலைக்காட்சிப்  பேட்டியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்  குஷ்பு  (பேட்டி அப்படித்தான் சுட்டப்பட்டிருக்கிறது!) பெண்கள் மீதான படுகொலை ஆசிட் வீச்சு போன்றவற்றிற்கும் ,வெகுசன சினிமா கதாநாயக மனோபாவத்திற்குமான தொடர்பு பற்றி சொல்லியிருக்கிற கருத்து அதிர்ச்சியளிக்கிறது.
கதாநாயகர்கள் பெண்களைப் பின் தொடர்வது,தொந்தரவு செய்வது இவற்றைச் செய்கிறார்கள் என்றாலும்  பெண்கள் மீது ஆசிட் வீச்சு,கொலைகளில் ஈடுபடுவதில்லை என்கிறார்.
பெண்கள் மீதான ஆசிட் வீச்சு,கொலை, பாலியல்வன்புணர்வு  இவற்றை   உருவாக்குவதில்  பெண்களை வெறும்  உடலாக , ஆண்களின் உரிமைப் பொருளாக, சுய மரியாதை,விருப்பு வெறுப்பு  இல்லாதவர்களாக சித்தரிக்கும் கருத்தாக்கத்திற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
இந்தக் கருத்தாக்கமே (திரைப்படம்,எழுத்து,வாய்மொழி வழியாக)பெண்கள் மீதான ஆசிட்வீச்சு,கொலை போன்ற அதீத கொடூரங்களுக்குக் காரணமாகிறது என்பதை மறுக்க முடியாது.
kushboo
இந்தப் புரிதல் இல்லாதவர் அல்ல குஷ்பு.
இன்றைய இளைய தலைமுறை , அரசியல்வாதிகளிடமிருந்து குறிப்பாக பெண்கள் விசயத்தில் மாற்றுச் சிந்தனைகளையும், போர்க்குணத்தையுமே எதிர்பார்க்கிறது.
இளைய தலைமுறை அரசியல்வாதிகளான நாம் இன்னும் சில மூத்த தலை முறை அரசியல்வாதிகளைப் போல கற்கால சிந்தனைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியாது.  அது பெண்களுக்கு இழைக்கப்படுகிற அநீதியாகவே இருக்கும்
குஷ்பு  சினிமா உலகத்தை மட்டும் சேர்ந்தவராக இருந்தால் கூட ஒரு பெண் என்கிற முறையில் அவருடைய சப்பைக்கட்டு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
ஒரு பொறுப்பான அரசியல் கட்சியின் பிரதிநிதியாக,   அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்ற  போர்வையில் சினிமா உலகின் தவறுகளை நியாயப்படுத்துவது அறமாகாது.
இது காங்கிரஸ் கட்சியை மிக மோசமான வெளிச்சத்தில் காட்டுவதோடு பெண்கள் மற்றும் அவர்கள் பக்கம் நீதியின் பாற்பட்டு நிற்கிற ஆண்கள்  கருத்தியல் ரீதியாக முன்னெடுத்திருக்கிற போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும். அவர் அந்தக் கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.