சென்னை
அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம் மற்றும் ராஜபாளையம் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படாததால் நடிகைகள் குஷ்பு மற்றும் கவுதமி ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொகுதிகள் விவரம் வெளி வரும் முன்பே சேப்பாக்கம் மற்றும் ராஜபாளையம் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டன. அதற்கு ஏற்றபடி நடிகை குஷ்பு சேப்பாக்கம் தொகுதியிலும் கவுதமி ராஜபாளையம் தொகுதியிலும் பல சமூகப் பணிகளை மேற்கொண்டனர்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் அவருக்கு குஷ்பு கடுமையான போட்டியாளராக விளங்குவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். மேலும் குஷ்புவும் இது குறித்து மறுப்பு தெரிவிக்காமல் கட்சி வாய்ப்பளித்தல் களத்தில் இறங்க உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் தனது சொந்த செலவில் அங்கு ஒரு பணிமனையை உருவாக்கினார்.
ஆனால் நேற்று முதல் சேப்பாக்கம் தொகுதியில் பாஜக போட்டியில்லை எனத் தகவல்கள் தெரிவித்தன. மாலை அந்த தொகுதி பாமகவுக்கு என அதிமுக அறிவித்தது. இதையொட்டி குஷ்பு கடும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தனது டிவிட்டரில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை கவுதமி ராஜபாளையம் தொகுதியில் மக்களிடையே சென்று குறைகளை கேட்டு வந்தார். இதையொட்டி அவர் அந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என அனைவரும் நம்பினார்கள். அவரும் ஒரு வேட்பாளரைப் போல் தீவிரமாக சமூக நலப்பணிகளைச் செய்து வந்தார். ஆனால் தற்போது ராஜபாளையம் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை கவுதமியும் கடும் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கவுதமி தனது டிவிட்டரில், “இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னைப் பாவித்து கடந்த 5 மாதங்களாக தங்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்குத் தலைவணங்கி, உங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன்.” எனப் பதிந்துள்ளார்.