டில்லி

மாநிலங்களவையில் பிரதமர் மோடியைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாகச் சாடி உள்ளார். 

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி, நன்றி தெரிவித்துப் பேசினார்.  அப்போது அவர் காங்கிரசைக் கடுமையாக விமர்சித்தார்.  இது பெரும் சர்ச்சை ஆனது  நேற்று மாநிலங்களவையில் இதற்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலளித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே,

“இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கை இல்லாதவர்கள் காங்கிரசுக்குத் தேசபக்தியைப் போதிக்கின்றனர். பிரதமர்  மோடி இரு அவைகளிலும் தனது பேச்சில் காங்கிரசைத்தான் திட்டினார்.  அவர். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும், தன்னைப் பற்றிப் பேசாமல், காங்கிரஸ் கட்சியை மட்டுமே பேசினார். 

இப்போதும் அவர் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை பற்றி பேசவில்லை.  அரசாங்கத்திடம் எந்த தரவுகளும் இல்லை. இந்த என்.டி.ஏ. என்பது தரவு கிடைக்காத அரசாங்கம்.

கடந்த 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை, வேலைவாய்ப்பு தரவு இல்லை, சுகாதார கணக்கெடுப்பு இல்லை. ஆனால் அரசாங்கம் அனைத்து புள்ளிவிவரங்களையும் மறைத்து பொய்களைப் பரப்புகிறது.  பிரதமர் மோடி பொய்களைப் பரப்புவதற்கு மட்டுமே உத்தரவாதமானவர்” 

என்று மோடியைக் கடுமையாகச் சாடி உள்ளார்.