கொச்சி

ஷார்ஜாவில் இருந்து தலையில் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொச்சி விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து ஒரு விமானம் வந்துள்ளது.  அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு இளைஞர் நௌஷத்.   அனைத்துப் பயணிகளிடமும் வழக்கம் போல சுங்கத்துறையினர் சோதனை இட்டுள்ளனர்.   இந்த சோதனையின் போது நௌஷத் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடம் தரும் வகையில் இருந்துள்ளது.

அதையொட்டி சுங்கத்துறையினர் நௌஷத் என்னும் அந்த இளைஞரைத் தனியாக அழைத்துச் சென்று சோதனை இட்டுள்ளனர்.   அப்போது நௌஷத் 1.25 கிலோ எடை உள்ள தங்கத்தைத் தலையில் மறைத்து வைத்து எடுத்து வந்திருந்தது தெரிய வந்துள்ளது.   உச்சந்தலையில் உள்ள முடியை ஷேவ் செய்து விட்டு அங்குத் தங்கத்தை வைத்து விட்டு அதை விக்கினால் மறைத்து நௌஷத் எடுத்து வந்துள்ளார்.

நௌஷத் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.    வழக்கமாகத் திரைப்படத் துறையினர் இது போல் சம்பவம் நடந்தால் அதை தங்கள் திரைப்படங்களில் பயன் படுத்துவார்கள்.   ஆனால் இத்தகைய ஒரு சம்பவம் சூர்யா நடித்த அயன் படத்தில் வந்துள்ளது.   அந்தப் படத்தில் அவர் தனது விக்கில் வைரத்தை கடத்தி வருவார்.