க்னோ

பிரபல இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்டோர் மீதான தேச துரோக வழக்குக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார்.

சிறுபான்மையினர் மீதான வன்முறை தாக்குதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இயக்குநர் மணிரத்னம் உட்பட 50 பிரபலங்கள், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்கள். அதை எதிர்த்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பீகார்  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். சுதிர்குமாரின் வழக்கை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி, இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின் அடிப்படையில் இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்குத் தொந்தரவு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பீகார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாக அறிவிக்கப்பட்டது.  இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கு பல எதிர்க்கட்சித் தலைவர்கள்,  “வரலாற்று ஆய்வாளர் ராம் குகன், இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி போன்ற சமூக அக்கறை உள்ள கலைஞர்களைத் தேசத் துரோகிகள் என்று சொல்வதை விடப் பேரபாயம் வேறு எதுவும் இல்லை! சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்தவர்கள்,  ஜனநாயகத்தின் முன்பு படுதோல்வி அடைந்ததுதான் இதுவரை வரலாறு என தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், 49 பிரபலங்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும், தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற  அறிவுறுத்தலின்படியே, காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.