புதுடெல்லி: தீபாவளி பண்டிகையின்போது பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைப்பதற்கு பொதுமக்கள் உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்.

தலைநகர் டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பசுமைப் பட்டாசுகளை வெளியிட்டு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்துவதன் மூலம் 30% அளவிற்கு சுற்றுப்புற மாசை குறைக்க முடியும்.

இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்வதற்கான செலவு குறைவு. இதனால் மக்களுக்கு இந்தவகையான பட்டாசுகள் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, மக்கள் இந்தவகையான பட்டாசுகளை வாங்கி, இந்தாண்டு தீபாவளியை மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் கொண்டாடி, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க உதவ வேண்டும்” என்று பேசினார் அமைச்சர்.