கொல்கத்தா: கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அனுமான் வேடமிட்டு பாரதீய ஜனதாவுக்காக கடும் பிரச்சாரம் செய்த நிபாஷ் சர்கார் என்பவர் என்ஆர்சி தொடர்பான அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

என்ஆர்சி தொடர்பான அச்சத்தால் அம்மாநிலத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கொல்கத்தாவிற்கு வருகை தந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, என்ஆர்சி நடைமுறை அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். எனவே, அப்படி நடந்தால் தானும் மேற்குவங்கத்தைவிட்டு வெளியேற்றப்பட்டு விடு‍வோமோ என்ற அச்சத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது ரனாகட் தொகுதியில் போட்டியிட்ட பாரதீய ஜனதாவின் ஜகன்னாத் சர்காருக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பூச்சி மருந்தை உட்கொண்டு விட்டதாகவும், ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மரணமடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம், இது என்ஆர்சி தொடர்பான மரணம் கிடையாது என்று அவரின் குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. தன்னை மீறித்தான் என்ஆர்சி -யை மேற்குவங்கத்தில் அமல்படுத்த முடியும் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.