திருவனந்தபுரம் : 

கேரளாவில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ. 13 என விலை நிர்ணயம் செய்து அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. தண்ணீர் பாட்டில் விற்பனையை அத்தியாவசிய விற்பனை பொருட்கள் பட்டியலிலும் சேர்த்துள்ளது கேரள அரசு.

கேரள அரசு தண்ணீருக்கான விலையை நிர்ணயம் செய்ய முடிவு செய்து கடந்த 2018 ம் ஆண்டு உற்பத்தியாளர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் ரூ. 12 என அரசும் ரூ. 15 என உற்பத்தியாளர்களும் கோரிய நிலையில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் நிலுவையில் இருந்த பிரச்சனைக்கு, இப்பொழுது ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை ரூ. 13 என முடிவாகி உள்ளது.

 

கேரள உணவுதுறை மற்றும் கேரள பாட்டில் தண்ணீர் உற்பத்தியாளர்கள் சங்கமும் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, உணவு துறை சமர்ப்பித்த விலை நிர்ணய பரிந்துரையில் முதல்வர் பினராயி விஜயன் கையெழுத்திட்டதாக உணவு துறை அமைச்சர் திலோத்தமன் தெரிவித்தார். மேலும், இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

கேரள உற்பத்தியாளர்கள் சங்கமும் இந்த விலை கட்டுப்பாட்டை வரவேற்றுள்ளது. மொத்தம் 200க்கும் மேற்பட்டோர் பாட்டில் தண்ணீர் உற்பத்தி செய்தாலும் 100 க்கும் குறைவானவர்களே இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். இந்த விலை குறைப்பு நடவடிக்கைமூலம் அங்கீகாரம் பெறாத உற்பத்தியாளர்கள் கணிசமாக குறைவார்கள் என்று நம்பப்படுகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீர் பாட்டிலின் விலையை 2012 முதல் ரூ. 20 என உயர்த்தியதை தொடர்ந்து அனைத்து உற்பத்தியாளர்களும் விலையை உயர்த்திய நிலையில், தற்போது கொண்டுவந்திருக்கும் விலை நிர்ணய அறிவிப்பு, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே, கேரளாவில் அரசு உற்பத்தி செய்யும் தண்ணீர் பாட்டில் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 10 என விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.