திருவனந்தபுரம்

ங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷை கேரள முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் வருடம் ஜூலை மாதம் 5 ஆம் தேதி அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கத்தைக் கைப்பற்றினர்.  இது  அரபு அமீரக தூதரக பணியாளர் முகவரியைக் கொண்டிருந்தது.  அமீரக தூதரகம் இதில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என மறுத்தது.

இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியரும் கேரள மாநில தகவல் தொடர்பு கட்டமைப்பு நிறுவன மேலாளருமான ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வரின் முன்னாள் தலைமை ஆலோசகருமான சிவசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.    இந்த வழக்கு அறிக்கையில்  இந்த இருவரும் கடந்த 2019 நவம்பர் முதல் 2020 ஜனவரி வரை சுமார் 167 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது.

இவை அனைத்தும் கேரளாவில் உள்ள்ச அமீரக தூதரக முகவரி கொண்ட பார்சல்கள் மூலம் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்பட்டது.  அத்துடன் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் மலேசியாவில் இருந்தும் தங்கம் கடத்தி வர திட்டமிட்டு இருந்ததாகவும் சொல்லப்பட்டது.  இந்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு பங்கம் உண்டானதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தங்கக் கடத்தலுக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளதாகத் தகவல் கசிந்து கடும் பரபரப்பு ஏற்பட்டது.   மார்ச் 5 ஆம் தேதி சுங்கத்துறை ஆணையர் சுமித் குமார் அளித்த பிரமாணப் பத்திரத்தில் ஸ்வப்னா சுரேஷ் அன்னிய கரன்சியை பினராயி விஜயன் மற்றும் சபாநாயகருக்குக் கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது முக்கிய திருப்பமாகக் கேரள காவல்துறை இந்த வழக்கில் ஸ்வப்னாவை விசாரணை செய்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது வழக்குப் பதிந்துள்ளது.   அந்த வழக்கில் இந்த அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷை முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தவறான நோக்கத்துடன் பொது ஊழியர் மீது குற்றம் சாட்டுதல்,  பொய்ச்சாட்சி சொல்ல ஒருவரைத் தூண்டுதல் ஆகிய பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.  வரும் 6 ஆம் தேதி கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த வழக்கு முக்கியமானதாக பார்க்கபடுகிறது.