கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்தின் போது களம் இறங்கிய  மீட்புப் படையினர், பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பயணிகள் உள்பட 500 பேர் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேரளா சுகாதார அமைச்சர் ஷைலஜா அறிவுறுத்தி உள்ளார்.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் பலியாகியுள்ளனர்.

விபத்து நிகழ்ந்த போது அரசு தரப்பு முழு வீச்சில் செயல்பட்டபோதும், விமான நிலையம் அருகில் இருந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் விபத்தை காண கூடிவிட்டனர். கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட சமூக இடைவெளியை மக்கள் கடைபிடித்ததாக தெரியவில்லை.

இந்த விபத்தில் சிக்கிய 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உயிரிழந்த ஒருவருக்கும் கொரோனா இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந் நிலையில் விமான விபத்தை பார்க்க கூடிய கிராம மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு சுகாதார துறை அமைச்சர் சைலஜா அறிவித்திருக்கிறார்.

மேலும் விமான விபத்தின் போது களம் இறங்கிய  மீட்புப் படையினர், பாதிக்கப்பட்ட பயணிகள் உள்பட 500 பேர் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.