கோழிக்கோடு: விமான விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

வந்தா பாரத் திட்டத்தின்கீழ் துபாயில் இருந்து இந்தியர்களை அழைத்துவந்த  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம்  நேற்று இரவு  கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது,  கனமழை மற்றும் வானிலை பாதிப்பு காரணமாக, ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிழந்துள்ளனர்.காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, விபத்து நடந்த பகுதியை பார்வையிட்ட மத்திய சிவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி,  இந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில், விபத்து குறித்து ஆய்வு நடத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும்,   விபத்தில் காயம் அடைந்தவர் களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.