மூணாறு: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மூணாறு பகுதியில்  பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்த நிலையில், இதுவரை 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் காணாமல் போன 39 பேரை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.

கேரள மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில்   நேற்று (7ந்தேதி) பெய்த பலத்த மழை காரணமாக அதிகாலை மாவட்டத்தில் மூணாறில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில்  பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

அந்த பகுதியில், உள்ள தேயிலை தோட்டங்களில் கேரள மாநிலத்தவர்கள்  மட்டுமின்றி, தமிழகத் தின் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள்.  அவர்கள் குடியிருந்த  குடியிருப்பு அருகே திகாலை 5 மணி அளவில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன. இந்த குடியிருப்புகளில் மொத்தம் 81 பேர் வசித்து வந்ததாகவும், அவர்களில் 3 பேர் தப்பிய நிலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த  78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். உயிர் தப்பியவர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து,  எர்ணாகுளம், மறையூர் தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  இதனைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப்படை வரவழைக் கப்பட்டு, நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடங்கியது.

முதற்கட்டமாக 15 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், நிலச்சரிவில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. இன்று மேலும் பல சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் 39 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவில் இறந்தவர்களுள் 9 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.