திருவனந்தபுரம்: கேரளாவில்  பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கேரளா‘வில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் குறித்து கேரள முதல்வரிடம் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஆலோசனை நடத்தினார்.

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளாவில் கடந்த இரு நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. கேரளாவின் கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிககனமழை கொட்டி தீர்த்தது.  இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கி அதிகம் பேர் பலியாகினர். கோட்டயம் மாவட்டம் முண்டக்கயத்தில் மணிமலையார் நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் வீடு ஒன்று முழுமையாக அடித்து செல்லப்பட்டது.

குடியிருப்பு பகுதிகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. கன மழையால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. புல்லகாயார் (Pullakayar ) ஆற்றில் 15 அடி உயரத்திற்கு தண்ணீர் கரைபுரண்டோடுவதால் ஆற்றங்கரையோரத்தில் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டுமானங்கள் அனைத்தும் சேதமடைந்தன.

கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் காணாமல் போனவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் கூட்டிக் கலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 7 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இதுவரை அங்கு 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இடுக்கி அணையில் நீர் மட்டம் 2 ஆயிரத்து 396 அடியை கடந்துள்ளது. முழு கொள்ளளவை எட்ட இன்னும் 7 அடியே உள்ளதால், இடுக்கி அணைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், அணைகளை திறப்பது குறித்து முடிவெடுக்க உயர்மட்ட குழுவை அமைத்து பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, வரும் 20ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மீட்பு பணிகளை விரைவுபடுத்தும் விதமாக இடுக்கி, கோட்டயம், கொல்லம், கன்னூர், பாலக்காடு மாவட்டங்களுக்கு கூடுதலாக 5 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கல்லூரிகளை வரும் 25ஆம் தேதி வரை திறக்க வேண்டாம் என்று பினராயி விஜயன் உத்தரவிட்டுளார். கனமழை வெள்ளம் காரணமாக சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயில் மற்றும் பாலக்காடு – நெல்லை விரைவு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகள், முகாம்கள் போன்றவற்றில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, கேரளாவில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தபோதும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 24 மணி நேரமும் செயல்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா 4 லட்சம் ரூபாய் உதவி தொகை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே கேரளாவில் நாளை முதல் மீண்டும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில் கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் குறித்து கேரள முதல்வரிடம் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது தேவையான உதவிகளை செய்வதாகவும், உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.