தண்ணீர் தர வலியுறுத்தி தமிழக வாகனங்களை உடைக்கும் கேரளா ஜனதாதளம்

Must read

 

பொள்ளாச்சி:

மிழகம் தண்ணீர் தர வலியுறுத்தி கேரளாவைச் சேர்ந்த ஜனதாதளம் கட்சியினர் தமிழக வாகனங்களை உடைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து வருடம் தோறும் ஒப்பந்த அடிப்படையில் 7.25 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்படுகிறது.

தற்போது அப்பகுதியில் மழை அளவு குறைந்து வருகிறது. ஆனாலும் வருடம்தோறும் வழங்கும் தண்ணீரை தமிழகம் கேரளாவுக்கு திறந்து விடுகிறது. இதுவரை 5.5 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றே முக்கால் டி.எம்.சி. தண்ணீர் தான் வழங்க வேண்டும். இதற்கு மே மாதம் வரை கால அவகாசம் இருக்கிறது.

ஆனால் அந்த ஒன்றே முக்கால் டி.எம்.சி. தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று கேரள கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இவற்றில், கேரளாவைச் சேர்ந்த ஜனதா தளம் கட்சியினர், உடனே தண்ணீர் திறந்துவிடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர்.

கேரள மாநிலம் சித்தூர் தொகுதி ஜனதா தளம் எம்.எல்.ஏ. வாக கிருஷ்ணன் குட்டி தற்போது கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறார். இவர் தமிழகத்தில் இருந்து உடனே தண்ணீர் திறந்து விடாவிட்டால்  கேரளாவுக்கு வரும் தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தப்போவதாக அறிவித்தார்.

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். ஆனால் நேற்று இரவு 9 மணி முதலே அவரது தலைமையில் ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் தமிழக -கேரள எல்லையில் திரண்டனர்.

பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வழியாக பாலக்காடு செல்லும் சாலையிலும், பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சி புரம் வழியாக திருச்சூர் செல்லும் கேரள எல்லை பகுதியிலும் ஜனதா தளம் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சாலையில் அமர்ந்து தமிழக வாகனங்களை கேரளாவுக்குள் நுழைய விடாமல் மறித்தனர்.

இதனால் கேரளாவுக்கு காய்கறி, பால் ஏற்றி சென்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. அவைகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

மேலும், இந்தப் போராட்டத்தின் போது தமிழகத்தை சேர்ந்த 4 வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டன.  இரு மாநில காவல்துறையினரும்  எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். . தமிழக வாகனங்களை கேளராவுக்கு செல்ல விடாமல் தமிழக  காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.

நேற்று இரவு விடிய, விடிய  நடைபெற்ற போராட்டம்  இன்று இரண்டாவது  நாளாக  நீடித்து வருகிறது. இதனால் தமிழக வாகனங்கள் கேரளாவுக்குள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

கேரளாவில் ஜனதா தளம் கட்சியினர் நடத்தும் போராட்டத்தைக் கண்டித்து தமிழகப் பகுதியில் பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் ம.தி.மு.க.வினர் மற்றும் தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள், கேரள பதிவெண் கொண்ட வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

இதன் காரணமாக தமிழக வாகனங்கள் கேரளாவுக்கு செல்லவில்லை. கேரள வாகனங்களும் தமிழகத்திற்கு வர முடியவில்லை.

அப்பகுதியில் பரபரப்பான சூழல்நிலவுகிறது.

More articles

Latest article