திருவனந்தபுரம்: குருவாயூர் கிருஷ்ணன் கோயில் மேல்சாந்தியாக யூடியூப் புகழ் ஆயுர்வேத மருத்துவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யுடியூப் புகழ் மருத்துவரான கக்கன் கிரண் ஆனந்த் குருவாயூர் கோவில் மேல் சாந்தியாக நியமிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் 6 மாதங்களுக்கு ஒரு முறை மேல்சாந்தியை தேர்வு செய்வது வழக்கம். அதன்படி தற்போது மேல்சாந்தியாக உள்ள  கிருஷ்ணசந்திரன் நம்பூதிரியின் பதவிக்காலம்  செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய மேல்சாந்தியாக குருவாயூர் கக்காடு பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான கிரண் ஆனந்த் நம்பூதிரி (34) தேர்வு  செய்யப்பட்டார். இவர் அக்டோபர் 1ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இவர் குருவாயூர் கோயில் மேல்சாந்தியாக இருப்பார்.

புதிய மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிரண் ஆனந்த் நம்பூதிரி ஒரு ஆயுர்வேத டாக்டர் ஆவார். இவரது மனைவி மானசியும் ஆயுர்வேத டாக்டர் ஆவார். இவர்கள் இருவரும் ரஷியாவில் தங்கி பணிபுரிந்து வந்தனர். அப்போது ஆயுர்வேதம் மற்றும் இசை தொடர்பான வீடியோக்களை யூ டியூப்பில் வெளியிட்டு வந்தனர். சுமார் 179 வீடியோக்கள் வரை யூ டியூப்பில் பதிவிட்டுள்ளனர். இவர்களின் யூ டியூப் வீடியோக்களுக்கு கேரளா உள்பட நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதுகுறித்து கூறிய  கிரண், தான் குருவாயூர் கோவிலுக்கான பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவன். எனது தந்தை இக்கோவிலில் வழிபாடுகள் நடத்தி வந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு பூஜைகள் நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே அவருக்கு உதவி செய்யவே நான் இங்கு வந்தேன். இப்போது எனக்கு கோவிலின் மேல் சாந்தி பொறுப்பு கிடைத்துள்ளது. இதனை எனக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறேன். இப்பணியில் ஈடுபடுவதன் மூலம் இறைவனுக்கு செய்யும் சேவையில் மேலும் ஒருபடி உயரும் என நம்புகிறேன். கோவில் பணிகளில் ஈடுபட்டாலும் எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இசை குறித்தும், கலை இலக்கியம் மற்றும் ஆயுர்வேதம் பற்றியும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடுவேன். எனது நண்பருடன் இணைந்து பக்தி இசை ஆல்பம் வெளியிடவும் திட்டம் உள்ளது.

மேல் சாந்தி பதவி காலம் முடிந்ததும் குருவாயூரில் ஆயுர்வேத மருத்துவமனை அமைக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.