திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாவட்டங்களை எ பி சி என  பிரித்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது.  நேற்று ஒரே நாளில் 46,387 பேருக்குத் தொற்று உறுதியாகி உள்ளது.  இம்மாநிலத்தில் 46 ஆயிரத்துக்கும் அதிகமாகத் தொற்று  பரவியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   சோதனையுடன் ஒப்பிடுகையில் தொற்று 40.21% ஆகி உள்ளது.

இதையொட்டி கேரளாவில் இன்று முதல் கடும் கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளடு.  வரும் 23 மற்றும் 30 தேதிகளில் 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  மக்கள் அத்தியாவசிய தேவைத் தவிர மற்றவற்றுக்கு பொதுமக்கள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்துக்குப் பிறகு கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“பொதுமக்கள் வரும் 23, 30 ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள், மால்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் நிபந்தனைகளுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  மேலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். அத்துடன் 10, 11, 12 வகுப்புகளுக்கு மட்டும் நேரடியாகவும், ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்படும்.

கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஏ, பி, சி என்று 3 பிரிவுகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ‘ஏ’ பிரிவில் உள்ள மாவட்டங்களில் அரசியல், மதம், கலாச்சார நிகழ்ச்சிகள், திருமணம், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

அடுத்ததாக ‘பி‘ பிரிவில் உள்ள மாவட்டங்களில் அரசியல், மதம், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

‘சி’ பிரிவில் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போது ‘சி’ பிரிவில்  எந்த மாவட்டமும் வரவில்லை. மாவட்டங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிரிக்கப்பட்டு அப்போதைய நிலவரப்படி கொரோனா கட்டுப்பாடு அறிவிக்கப்படும். ஆயினும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்குக்கு இணையாக அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் தொடரும்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.