டெல்லி: தூதரகம் பெயரை பயன்படுத்தி 230 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து கேரளாவிற்கு தூதரகம் பெயரை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளா முதலமைச்சரின் அலுவலக முக்கிய அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.
தங்கம் கடத்திய வழக்கில் கைதான ஸ்வப்னா, சரித் ஆகியோரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் கேரளாவை உலுக்கிய இந்த விவகாரத்தில், ஜூலை 2019 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக பணியின் சில ஊழியர்களை பயன்படுத்தி குறைந்தது 230 கிலோ தங்கம் கடத்தப்பட்டது என்று தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: மொத்தம் 13 முறை சரக்கு போக்குவரத்து நடைபெற்றுள்ளது. ஆனால் எந்த சோதனைகளும் அப்போது நடத்தப்படவில்லை. சில சரக்குகள்  70 கிலோவை தாண்டியும் இருந்துள்ளது. இதுதொடர்பாக சில அரசு துறைகள் நடத்திய விழாக்கள், நிகழ்ச்சிகள் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.