கோட்டயம்

கேரள முதல்வர் தற்போது சபரிமலையில் நிலைமை சீராகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஏராளமான கூட்டத்தால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே பக்தர்கள் கடும் அவதி அடைவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதற்குப் பாதுகாப்பு குளறுபடியே காரணம் என காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் ஆளும் அரசு மீது குற்றம்சாட்டினர்.

நேற்று கோட்டயத்தில் முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

முதல்வர் தனது பேட்டியில்,

”அரசின் களப்பணிகள் சபரிமலையில் மிகவும் கவனத்துடன் நடைபெற்று வருகிறது. இதனால் சபரிமலையில் தற்போது நிலைமை சீராகி அமைதியான சூழல் நிலவி வருகிறது. சென்ற ஆண்டு சபரிமலை சீசனையொட்டி பாதுகாப்பு பணிக்கு 16,070காவலர் நியமிக்கப்பட்டு இந்த ஆண்டு 16,120 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளனர். 

ரூ. 108 கோடி செலவில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக செங்கனூர், கழக் கூட்டம், சிரங்கரை, எருமேலி, நிலக்கல், மணியம் கோடு ஆகிய 6 இடங்களில் ஓய்வு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்னை மழை வெள்ளம், தெலுங்கானா தேர்தல் காரணமாகச் சபரிமலை பயணத்தை ஒத்தி வைத்தவர்களும் தற்போது தரிசனத்திற்கு வர தொடங்கி இருக்கிறார்கள். இதுவும் நெரிசலுக்குக் காரணமாக இருக்கலாம். ஆகவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. 

சென்ற சீசனில் இதே காலத்தில் சராசரியாக 62 ஆயிரம் பக்தர்கள் சபரிமலை தரிசனத்திற்கு வந்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 88 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்தக் கூட்ட நெரிசல் புல்மேடு, எருமேலி காட்டுப் பாதை வழியாகப் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் ஏற்படுகிறது. 

ஆகவே இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் சபரிமலையில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் சீசன் நேரத்தில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்வது காலம், காலமாக நடைபெறும் வழக்கமான நிகழ்வு தான்.” 

என்று கூறி உள்ளார்.