திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ள நிலையில், ஆளுநரை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியில் இருந்து நீக்கும் மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக மாநில ஆளுநர்கள் இருந்து வருகின்றனர். இதனால், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளை நிரப்பு வதில் ஆளுநருக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு, தமிழக சட்டப்பேரவையில், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளை நிரப்பும் அதிகாரம் மாநில அரசுக்கும், வேந்தராக மாநில முதல்வர் இருக்கும் வகையில் முதன்முதலாக சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மேற்குவங்கம் உள்பட சில மாநிலங்களில், ஆளுநர்களுக்கு எதிராக சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், கேரளா சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கவர்னருக்கு எதிராக கேரள பல்கலைக்கழகம் தீர்மானம், கடந் 3 மாதங்களில் இரண்டுமுறை தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், இன்று கவர்னரை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்கும் சட்ட மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதுதொடர்பான மசோதாவில், கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானை பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். கவர்னர் அதிகாரத்தை குறைக்க வேண்டும். கவர்னருக்கு பதிலாக நிபுணரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
முன்னதாக கேரள மாநிலத்தில், ஆளுநர் ஒப்புதலின்றி முதல்வர் பினராயி தலைமையிலான மாநில அரசு, 9 பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்திருந்தது. இதற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், 9 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் உத்தரவிட்டதுடன், அவர்கள் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
கேரளாவில் முற்றும் மோதல்: ராஜினாமா செய்ய மறுத்த 9 துணைவேந்தர்களுக்கும் ஆளுநர் கடிதம்…