திருவனந்தபுரம்:  சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வரும் லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோட்டா படேலைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியாக  முன்னாள் அமைச்சர் பிரஃபுல் கோடா படேல் கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.  அவர் அங்கு சீர்த்திருத்தங்கள் என்ற பெயரில் பல்வேறு புதிய மாற்றங்களை அறிவித்து உள்ளார். இது அங்கு வாழும்  மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

லட்சத்தீவு நிர்வாகி அதிகாரி பிரஃபுல் படேலை மாற்றக் கோரி ஏற்கெனவே கேரள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த   நிலையில் லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரஃபுல் படேலைத் திரும்பப் பெறக் கோரி கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று தீர்மானம் தாக்கல் செய்தார். இந்த தீர்மானம்  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்மீது பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன்,  ”லட்சத்தீவில் வசிக்கும் மக்கள் மிகவும் கடினமான சூழலில் இருக்கிறார்கள். அவரின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை அங்குள்ள நிர்வாக அதிகாரியின் சர்வாதிகாரப் போக்கால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. மக்களின் எதிர்ப்பை மீறி நிர்வாகி அதிகாரி செயல்பட்டு வருகிறார். மக்களின் உணவுப் பழக்கம், வாழ்வாதாரம் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. லட்சத்தீவு மக்கள் அமைதியை விரும்புபவர்கள். ஆனால், நிர்வாக அதிகாரி எடுத்துவரும் நடவடிக்கைகள் மக்களை ஒதுக்கிவைக்கும் வகையில் இருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில், மக்களின் வாழ்வாதாரம் கூட அச்சுறுத்தப்படுகிறது.

அதனால், நிர்வாக அதிகாரியை மத்திய அரசு உடனே  திரும்பப் பெற்று, அவரின் சர்ச்சைக்குரிய முடிவுகள், உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.