கோழிக்கோடு: நேற்று இரவு கேரளாவில் நடைபெற்ற விமான விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, அந்த விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விமானம் விபத்துக்கு காரணம் என்ன என்பது விரைவில் தெரிய வரும் வாய்ப்பு உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின்மூலம் இந்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி இந்தியர்களை அழைத்து வருகிறது. அதன்படி, துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத் திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது.
இந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்தனர். ஆனால், கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக, விமானம் தரையிறங்கு வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், விமானத்தை விமான ஓடுதளத்தில் இறக்கியபோது, விமானம் து சறுக்கிக்கொண்டு அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானி, துணை விமானி உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியும், விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடலை பதிவு செய்த CVR கருவியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக,விபத்துக்கு காரணம் என்ன என்பது ஆய்வுக்கு பிறகு தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.