சிவகங்கை: கீழடி அகழாய்வு பணியில், இரண்டடுக்கு தரை தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள், 40 லட்சம் ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இரு வண்ண பானைகள், சிறிய வகை உலை கலன், பாசி, பெரிய விலங்கின் எலும்பு, இணைப்பு குழாய் பானைகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.
2ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட நீண்ட தரைதளத்தின் தொடர்ச்சியும் 6 ம் கட்ட அகழாய்வில் வெளிப்பட்டது. 3 அடி ஆழத்தில் இந்த தொடர்ச்சி கண்டறியப்பட்டதால், அதன் தொடர்ச்சியை கண்டறியும் அகழாய்வு பணியில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.
செங்கல் கட்டுமான தொடர்ச்சி கண்டறியப்பட்ட அதே குழியில் ஆறு அடி ஆழத்தில் புதிய தரை தளம் கண்டறியப்பட்டுள்ளது. தரை தளத்தில் ஒரே அளவு செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. செங்கற்கள் பிடிமானத்திற்கு வெண்மை நிற மண் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு செங்கல் மீது மற்றொரு செங்கல் வைத்து தரை தளம் கட்டப்பட்டுள்ளது.
தரை தளத்தின் தொடர்ச்சி தென்புறம் நீண்டு இருக்கிறது. அடுத்து தென்புற அகழாய்வில் குழிகள் தோண்டும் போது அதன் தொடர்ச்சி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கிடைத்த செங்கல் கட்டுமானம் தொழிற்சாலை போன்ற அமைப்பை கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில், அடுத்தடுத்து தரை தளங்கள் கிடைத்து வருவதால் அங்கு ஏதேனும் தொழிற்சாலை இயங்கி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.