சிறப்பு நேரடி செய்தி: சத்தியப்பிரியன்
கீழடியின் கதை இன்று நேற்று நடந்த கதையல்ல. 1979-ம் ஆண்டு வாக்கில் கீழடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் சரித்திர ஆசிரிய ராகப் பணிபுரிந்த திரு. வி.பாலசுப்ரமணியம் அங்கிருந்த பள்ளிவாசல் திடலில் தனது வரலாற்று ஆர்வங்களைத் தேடிக் கொண்டிருந்தபோது இரண்டு மண்
தாழிகளின் எச்சத்தைக் கண்டு பிடிக்கிறார். தனது ஆவல் மேலிட அப்போது மதுரையில் இருந்த கல்வெட்டு ஆய்வாளர் திரு. வேதாசலத்திடம் தனது கண்டுபிடிப்பைச் சொல்லி இருக்கிறார். பல்லாயிரம் நூற்றாண்டுகளைக் கடந்த தடயம் என்பது அவருக்குத் தெரிய வந்தது. தகவல் மத்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்திற்குச் செல்கிறது. பல வருடங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த விஷயம் பெங்களூரு வில் இருக்கும் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் ஒரு பிரிவான அகழ்வாராய்ச்சி நிறுவ னத்தின் அமைப்பாளர் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா பதவி ஏற்றுக் கொண்ட பின்பு சுறுசுறுப்பை அடைகிறது. அமர்நாத் தமிழும் தமிழர் தொன்மை நாகரிகமும் அறிந்தவர் என்பதால் தனது கவனத்தை இதன் மீது செலுத்துகிறார்.
கீழடி கிராமம் மதுரைக்கு மிக அருகில் ராமநாத புரம் செல்லும் சாலையில் விரகனூரை அடுத்த சிலைமான் என்ற சிற்றூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊர் சிவகங்கை மாவட்டத்த திற்கு உட்பட்டது. ஊரின் எல்லையில் வைகை ஆறு ஓடுகிறது. ஊரின் எல்லையில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் தான் பண்டைய நகரத்தின் தொன்மைகள் கிடைத்துள்ளன. அமர்நாத் ராமகிருஷ்ணா தனது குழுவை அழைத்துக் கொண்டுவந்து வைகை ஆற்றங்கரையில் மொத்தம் 293 இடங்களில் ஆய்வுகளை மேற்கொள்கிறார். இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்த நகரம் கண்டு பிடிக்கப்படுகிறது. வியந்து போன பாலசுப்பிரமணியன் நேரடியாக இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதுகிறார். கடிதம் கிடைத்ததும் மோடி விரைந்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார். தமிழக அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதன் பிறகே தமிழக அரசு தனது கவனத்தைக் கீழடி மீது திருப்பியது. உரிய முறையில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஆய்வுகள் துரித கதியில் இயங்கின. 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து முறைப்படி கள ஆய்வுகள் அமர்நாத் தலைமையில் நடைபெறத் தொடங்கின.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் புதைந்து போன நகர நாகரீகத்தைக் கண்டு பிடித்திருப்பது தமிழகத்தில் முதன்முறை என்று சொல்லலாம். மேலும் இது சமகால அகழ்வுகளின் தொடர்ச்சி என்ற அடையாளம் எதுவுமின்றி தனித்துக் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. மாளிகைகளும், சரியான முறையில் கட்டமைக்கப்பட்ட வீதிகளும், சுகாதாரத்தை முன்னிறுத்தி கழிவுநீர் வாய்க்கால்களும் அமைத்து வாழ்ந்த ஓர் உன்னத நாகரீகத்தைப் பல இடங்களில் சங்க காலப் பாடல்கள் கூறுகின்றன. வெறும் இலக்கிய ஆதாரங்களை மட்டும் வைத்து நமது பண்டைய நாகரீகத்தை வடிவமைத்த நமக்கு இந்த அகழ்வாய்வு மிக முக்கிய ஆதாரமாக இருக்கப் போவது உறுதி. சிந்து சமவெளியில்தான் நகர வாழ்க்கை இருந்தது என்றில்லாமல் சங்க காலத்திலும் தமிழகத்தில் ஓர் உன்னத நாகரீகம் இருந்தது என்று தமிழர்கள் மார்தட்டிக் கூறிக் கொள்ள கீழடி ஆய்வுகள் நிச்சயமாக உதவும்.
இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட் கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. சுட்டச் செங்கலில் செய்யப்பட்ட சுவர்கள், உறையுடன் உள்ளே இறக்கப்படும் வட்ட வடிவக் கிணறு கள், நீள் சதுரக் குளங்கள் போன்ற நகர அமைப்புகளும், வாள், கோடாலி, கத்தி போன்ற கருவிகளும் இவற்றில் அடக்கம். மட்பாண்டங்களில் பிராமி எழுத்துக்களில் திசன், ஆதன், உதிரன் போன்ற சங்ககாலப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவரை சங்க காலப் பெயர்களை புறநானூற்றுப் பாடல்களிலும் இன்னபிற சங்கப் பாடல்களிலும் கேள்விபட்டிருக்கும் நமக்கு அதற்கான நேரடி ஆதாரம் கிடைத்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது. தந்தத்தால் செய்த பகடைக் காய்கள், தந்த வளையல்கள், கூம்பு வடிவிலான தங்கமணிகள், இருவித நிறங்கள் பூசப்பட்ட மட்பானைகள், வேலைப்பாடுடன் கூடிய சங்கு வளையல்கள், பளிங்குக் கற்களில் செய்யப்பட வளையல்கள், பெரிய பெரிய செம்பு மணிகள், பெரிய தாழிகள் என்று ஒரு அருங்காட்சியகம் அமைக்கும் அளவிற்கு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆந்திர மாநிலங்களில் கிடைக்கும் மட்பாண்டங்கள் இந்த ஆய்வில் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. அதே போல roulette pot shreds என்ற ரோமானிய நகரத்தைச் சார்ந்த மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன. இவை மதுரை நகரம் சிறந்த வணிக மையமாக இருந்தது என்பதைத் தெளிவாகக் காட்டும் ஆதாரங்களாகும்.
அதேபோல குடியிருப்புப் பகுதிக்கான ஆதாரங்களும் , இடுகாடுகளுக்கான ஆதாரமும் ஒரே இடத்தில் கிடைத்திருப்பது இந்தக் கீழடியில்தான். ஆதிச்ச நல்லூரில் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை பெரும்பாலும் இறந்தோரை பெரிய பெரிய தாழிகளில் வைத்துப் புதைக்கும் இடுகாடுகளே ஆகும் . இதன் காரணமாக தமிழகத்தில் எங்கு தோண்டினாலும் இடுகாடுகலதான் கிடைக்கும் என்ற நகை முரண் பேச்சு தொல்பொருள் ஆய்வாளர்கள் மத்தியில் நிலவி வந்ததைக் கீழடி ஆய்வுகள் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன.
“ இது கண்டிப்பாகச் சங்ககால நாகரீகத்தின் புதைவுகள்” என்று அடித்துக் கூறும் அகழ்வாராய்ச்சி அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா “ இந்த ஆய்வு அவ்வளவு எளிதில் முடியக்கூடிய ஆய்வு இல்லை “ என்றும் கூறுகிறார்.
“ இந்த ஆய்வு சரியான திட்டமிடலுடன் இன்னும் பல வருடங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். “ என்ன ஓர் அற்புதமான கழிவுநீர் அமைப்பு சங்க காலத்தில் இருந்திருக்கிறது என்று நினைக்கும் போது நமக்குப் பெருமையாக இருக்கிறது. சுட்ட மண்ணில் செய்யப்பட்ட நீண்ட குழாய்களும் அந்தக் குழாய்கள் கழிவு நீரைக் கொண்டு வடிக்க பெரிய பெரிய சுட்ட மண்ணில் செய்யப்பட்டு மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட தாழிகளும் இதற்கு அடையாளமாகும்.” என்கிறார் அமர்நாத்.
“ இன்னும் பல கட்டிட அமைப்புகள் எந்த நோக்கத்துடன் கட்டப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. அதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் குறைந்தது நான்கைந்து வருடங்களாவது இந்த பகுதியில் மேலும் நீண்ட நிலப்பகுதிகளைக் கையகப் படுத்தி அகழாய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு தமிழக அரசின் ஆதரவு நிச்சயமாக தேவை. இதுவரை எங்களுக்குக் கிடைத்துள்ள பொருட்களை பெங்களூருவில் உள்ள அகழ்வாராய்ச்சி மையத்திற்குக் கொண்டு செல்கிறோம் . அவற்றை உரிய முறையில் பராமரிக்க வேண்டியது அவசியம். இத்துடன் இந்த அகழ்வாராய்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். தோண்டப்பட்டப் பள்ளங்களை பிளாஸ்டிக் சீட்டுகளால் மூடி பிறகு மண் நிரப்பி மூடப் போகிறோம் . திறந்திருந்தால் மழைக்காலத்தில் மழைநீர் புகுந்து நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு ஒரு பயனும் இல்லாமல் செய்துவிடும் “
இந்தியாவில் மொத்தம் ஆறு அகழ்வாய்வுப் பிரிவுகள் உள்ளன. வருத்தமான விஷயம் என்னவென்றால் ஐந்து பிரிவுகள் நர்மதை நதிக்கு வடக்குப் பக்கம் மட்டுமே உள்ளன. நர்மதைக்குத் தெற்குப் பகுதியில் அமைந்து உள்ள தென்னிந்தியாவில் அதிகப்படியான அகழ்வாய்வுகள் செய்யப்படவில்லை என்பது முகத்தில் அறியப்படும் நிஜம். தென்னிந்தியா வில் சமீபமாகத்தான் பெங்களூருவில் ஒரு மையம் தொடங்கப்பட்டுள்ளது. 2001-ல் தொடங்கப்பட்ட இந்த மையத்தில் இதுவரை இரண்டே இரண்டு ஆய்வுகள்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒன்று கர்நாடகா மாநிலம் குறுகோடு என்ற இடத்திலும் அடுத்துக் கீழடியிலும்தான் அவை . ஆனால் வடநாட்டில் கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த அளவிற்குதான் இந்தியத் தொல்துறையின் அக்கறை தென் இந்தியாவின் மீது இருக்கிறது. மதுரை ஒரு தொன்மையான நகரம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தாலும் அகழாய்வுப் பிரிவிற்கு மட்டும் தெரியாமலே இருந்திருக்கிறது. இதுவரை கீழடி அகழ்வாய்வைத் தவிர ஒரு புரிதலுடன் கூடிய திட்டமிடலுடன் அகழாய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றுதான் கூற வேண்டும்.
பொதுவாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய இரண்டு அகழ்வாய்வுகளின் முடிவுகள் இறந்தபிறகு முதுமக்களைத் தாழியில் வைத்து புதைக்கும் புதைகுழிகள் நிரம்பிய இடங்களே தமிழகத்தில் அதிகம் உள்ளன என்ற தீர்மானத்திற்கு வர வேண்டியிருந்தது. நகர நாகரீகம் புதைந்து போயிருக்கும் என்ற அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேயில்லை என்பதுதான் உண்மை. திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களின் தலைமையில் மொத்தம் 293 இடங்கள் வைகை நதியின் இருகரையின் மருங்கிலும் சுமார் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு பரப்பில் ஆய்விற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் நூறு இடங்களில் புதைந்த நகர நாகரீகம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் தெரிந்தன.
அகழ்வாய்விற்கு மிகவும் தடையாக உள்ள விஷயங்கள் என்னவென்றால் புதை யுண்ட நகரங்களின் மேல் நகரமயாதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் – தமிழகத்தின் பல இடங்களில் ஒரு நாகரீ கம் என்பது வட இந்தியாவில் இருப்பது போன்று ஊர் விட்டு ஊர்
செல்லாமல் நிலைத்து ஒரே ஊரில் வளர்வதால் நகரமயமாதல் என்பதைத் தவிர்க்க முடியாது- நிலங்களைக் கையகப் படுத்துவது என்பது கடினமான செயலாக உள்ளது. குறிப்பாக இந்தக் கீழடியை எடுத்துக் கொண்டாலே மத்திய தொல்பொருள் ஆய்வு மையத்திற்கு ஆராய்ச்சிக்கென்று குறைந்தது எண்பது ஹெக்டேர் நிலப்பரப்புள்ள அளவிற்கு நிலம் வேண்டியிருக்கிறது. நமது அரசியல் அமைப்பில் பட்டா போட்டு நிலம் கைமாறி கைமாறி நிலத்தின் சொந்தக்காரர்களிடமிருந்து ஆராய்ச்சிக்கு என்று நிலம் பெறுவது இயலாத செயல். நிலச் சொந்தக் காரர்களே முன்வந்து நிலத்தைக் கொடுத்தாலே அன்றி வேறு மார்க்கம் இல்லை. இந்தக் கீழடி ஆய்வுகளுக்குக் கூட நிலச் சொந்தக்காரர்கள் முன்வந்து இரண்டு ஏக்கர் நிலம் அளித்ததால்தான் இவர்களால் ஆய்வு மேற்கொள்ள முடிந்தது. இந்தியா முழுவதிலும் இன்னும் ஐம்பது அகழ்வாய்வுகளுக்கு மேல் மத்திய அரசின் முறையான ஆய்வரிக்கைக்குக் காத்திருக்கின்றன. ஆதிச்சநல்லூர் ஆய்வுகளுக்கான இறுதி அறிக்கையையே கூட இன்னும் வெளிவராமல் தொல்லியல் துறையின்வசம் உள்ளது.
இதற்கு நடுவில் திரைப்படத்துறையின் ஓர் இடது பிரிவு தேவையின்றி மூக்கை நுழைத்து மத்திய அரசும், மாநில அரசும் செயல்படவில்லை என்பது போல ஒரு பிம்பத்தை நிறுவி இதன் முழு விவரமும் தெரியாமல் சமூக ஊடகங்களில் அடிப்படையற்ற பிரசாரங்களை மேற்கொண்டு வருவது ஆய்விற்கு ஊறு விளைவிக்கும் என்பதைத் தவிரக் கூறிக் கொள்ள ஒன்றுமில்லை. தாங்கள் சார்ந்த அமைப்புகளின் நிலைப்பாடுகளை பிரசாரம் பண்ண இது போன்ற ஆராய்ச்சிகளில் மூக்கை நுழைக்கும்போது அது குறித்த முழு விவரங்களையும் திரட்டி கை நுனியில் வைத்துக் கொள்ளாமல் வெறுமனே உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக அறிக்கை விடுவது, ஊடகங்களில் கூவுவது போன்றவை சில நேரங்களில் ஆராய்ச்சிக்குப் பாதகமாக மாறிவிடும் என்பதை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது இரண்டு கட்ட ஆய்வுகள் முடிந்துள்ளன. மேலும் ஒரு கட்ட ஆய்வு நடைபெறும் என்றே தோன்றுகிறது. அந்த ஆய்வின் முடிவில் சங்ககாலத்தில் வாழ்ந்து புதைந்த நம் பண்டைய தமிழரின் நகரத்தைக் காணும் வாய்ப்பிற்காகக் காத்திருப்போம்.
அரசு- அது மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசகா இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
· தொல்பொருள் ஆய்வு என்பது நிதி சார்ந்த ஆய்வாகும். நிலம் கையகப் படுத்தவும், அகழாய்வு களப்பணிகள் மேற்கொள்ளவும் தாராளமான நிதி தேவைப்படும். ஒவ்வொரு முறையும் துறை சார்ந்த தலைவரிடம் சொல்லி சொல்லி நிதி பெற வேண்டியிருப்பதால் அரசு உரிய நிதியை ஒதுக்க முன்வர வேண்டும்.
· ஆய்வின் முடிவுகளை உடனுக்குடன் அரசு அறிக்கைகளாக வெளியிட்டால்தான் ஆய்வின் மீது நம்பகத்தன்மை மக்களுக்கு ஏற்படும் என்பதால் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆராய்ச்சியாளர்கள் தெளிவாக ஆய்வு நடத்தி அளித்துள்ள முடிவுகளைக் குறித்து அரசு உடனுக்குடன் அறிக்கை வெளியிட வேண்டும்.
· அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருள்களை பெங்களூரு சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள அருங்காட்சியகத்தில் கொண்டு வைத்தால் பத்தோடு பதினொன்று என்று தேங்கிவிடும். அதற்கு பதில் அகழ்வாய்வு மேற்கொண்ட இடத்தில் அருங்காட்சியகம் அமைத்து அங்கே தொல்போருல்களைப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தால் மக்களுக்கு அந்தப் பொருள்களின் மீது உணர்வு பூர்வமான பிடிப்பு நேரிடும்.
எது எப்படியோ கீழடி அகழ்வாய்வின் ஆய்வுகள் துரிதப்படுத்தப் பட்டால் சிந்து சமவெளி நாகரீ கத்திற்கு இணையான அல்லது அதற்கும் மேலான ஒரு நகர்ப்புற நாகரீகம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் அதிலும் பண்டைய நகரமான மதுரையில் இருந்ததற்கான சான்றுகள் நமக்குக் கிடைக்கும். மத்திய அரசும், மாநில அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா?