சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொடங்கப்பட்டுள்ள 6ம் கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பகுதி தமிழர்களின் வரலாற்று புதைவிடமாக காணப்பட்டு வருகிறது. அங்கு தற்போது 6ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. தற்போது திருப்புவனம் அருகே கொந்தகையில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
6வது கட்ட அகழ்வாய்வு பணியை திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய இடங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா். முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன.
பின்னர், கொரோனா ஊரடங்கு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், மே 20 ஆம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. தொடா்ந்து மே 23 ஆம் தேதி முதல் முறையாக மணலூரிலும் பணிகள் தொடங்கின. மே 27 ஆம் தேதி கொந்தகையில் பணி தொடங்கியது.இந்நிலையில் மே 28-ம் பெய்த பலத்த மழையால் கீழடி, அகரம், மணலூா், கொந்தகை ஆகிய 4 இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது அங்கு நீர் வற்றிய நிலையில் மீண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே நடைபெற்ற அகழாய்வின்போது, பல்வேறுஅரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது, விலங்கின் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏ ற்கனவே, சிறு சிறு எலும்பு துண்டுகள் கிடைத்த நிலையில், தற்போது, முதன் முறையாக நீளமான முதுகெலும்பு மற்றும் விலா எலும்புகளுடன் கூடிய விலங்கின் எலும்புக்கூடு அகழாய்வில் கிடைத்துள்ளது.
அதுபோல, அகழாய்வுக் குழிக்கு அருகிலேயே உள்ள தனியாா் நிலத்தில் தென்னை மரங்கள் வைப்பதற்கான குழிக்கள் தோண்டப்பட்டது. அப்போது, அங்கு முதுமக்கள் தாழியில் அமா்ந்த நிலையில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொல்லியல் ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது
அதனை தொல்லியல் ஆய்வாளா்கள் ஆய்வு செய்து வருகின்றனா். இந்த பகுதி பழங்கால தமிழா்களின் ஈமக்காடாக (சுடுகாடு) இருந்துள்ளது தெரியவருவதாக தொல்லியல்துறையினா் தெரிவிக்கின்றனா்.
ஏற்கனவே, 4ஆம் கட்ட அகழாய்வில், திமிலுடன் கூடிய காளைமாட்டின் எலும்பு கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கண்டெடுக்கப்பட்ட விலகிக்ன எலும்பு, எந்த விலங்கு வகையை சேர்ந்தது என்பது ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.