ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நடைபெறும் போராட்டத்தில் தானும் பங்கேற்க விரும்பவதாக இந்திய கபடி அணியின் தமிழக வீரர் சேரலாதன் கூறியுள்ளார்.
தமிழ் மக்க்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு தடை விதித்தது. ஆனாலும், தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டி இளைஞர்களும் பொதுமக்களும் திங்கட்கிழமை போராட்டத்தைத் தொடங்கினர். இவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே அலங்காநல்லூர் போராட்டம் பற்றி, இந்திய கபடி அணியின் தமிழக வீரர் சேரலாதன், தெரிவித்ததாவது:
“ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி இத்தனை இளைஞர்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பது சிலிர்க்க வைக்கிறது. அவர்களது போராட்டத்திற்கு ஆதரவும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அலங்காநல்லூர் போராட்டத்தில் கலந்துகொள்ள எனக்கும் மிகவும் விருப்பம்தான். ஆனால் அதற்கான சூழல் இல்லாதது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார்.