பிக்பாஸ் இல்லத்தில் 90 நாட்களுக்கும் மேலாக வசித்து வந்த கவின் ரூ. 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேறியது தற்போது உறுதியாகியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. முதல் 2 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், 3வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். மூன்றாவது சீசனில் கவின், லாஸ்லியா மரியனேசன், முகன் ராவ், சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், வனிதா விஜயகுமார், அபிராமி வெங்கடாச்சலம், மதுமிதா, சாக்ஷி அகர்வால், சரவணன், ரேஷ்மா பசுபுலேட்டி, மோகன் வைத்தியா, பாத்திமா பாபு என்று 15 போட்டியாளர்களை வைத்து தொடங்கிய இந்நிகழ்ச்சில், 16வது போட்டியாளராக மீரா மிதுன் 2வது நாள் இணைந்தார். அதன் பின்னர் வைல்ட் கார்டு என்ட்ரியாக கஸ்தூரி உள்ளே நுழைய, நிகழ்ச்சியும் சுவாரஸ்யமானது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நபர் வெளியேற்றப்பட, கடந்த வாரம் இயக்குநர் சேரன் மக்களின் வாக்குகளால் வெளியேற்றப்பட்டார்.

இத்தகைய சூழலில் ஒருவர் மட்டுமே 50 லட்சம் வெல்ல முடியும் என்கிற சூழலில், ரூ. 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேற நினைக்கும் நபர் வெளியேறலாம் என்று பிக்பாஸ் வாய்ப்பு ஒன்றை சாண்டி, கவின், ஷெரின், லாஸ்லியா மற்றும் கவினுக்கு கொடுக்க, கவின் தான் வெளியேறுவதாக கூறுகிறார். இதற்கு லாஸ்லியாவும், சாண்டியும் எதிர்ப்பு தெரிவிக்க, ஒருகட்டத்தில் இருவரும் அழத்தொடங்கிவிடுகின்றனர். ஆனாலும், தான் வெளியேறுவதில் உறுதியாக இருந்த கவின், 5 லட்ச ரூபாய்க்கான பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் காட்சியை தற்போது ப்ரோமோவாக விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் இல்லத்தில் பெண்களுடன் பழகியது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய கவின், லாஸ்லியாவை திருமணம் செய்துக்கொள்ள விரும்பி, அது தொடர்பாக அவரிடம் தனது விருப்பத்தையும் தெரிவித்திருந்தார். ஆனால் லாஸ்லியாவின் தந்தை அதுபற்றி பேச விரும்பாத காரணத்தால், பிறகு முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று இருவரும் இருந்த நிலையில், தற்போது கவின் வெளியேறியிருப்பது இருவரது ஆதரவாளர்கள் இடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.