டில்லி

காவிரி ஒழுங்காற்றுக குழு தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், டில்லியில் கடந்த 18-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டத்தை இன்று நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது காவிரியில் இருந்து வினாடிக்கு 12,500 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் வாடும் பயிர்களைக் கருத்தில் கொண்டு நீரின் அளவை குறைக்காமல், அக்டோபர் மாதத்திற்கான 20.22 டி.எம்.சி. தண்ணீரை உரிய நேரத்தில் காவிரியில் இருந்து கர்நாடக அரசு திறக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

கர்நாடக அரசு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 53 சதவீதம் மழை பற்றாக்குறை நீடிப்பதாக அரசு வாதிட்டது. அதனால் காவிரியில் இருந்து இதற்கு மேல் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்தது  ஆயினும் காவிரி ஒழுங்காற்றுக் குழு தமிழகத்திற்குக் காவிரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.