அத்தியாயம்: 3
சூர்ப்பனகை அடிக்கடி கோதாவரி ஆற்றில் இறங்கி வெகுநேரம் நின்று கொண்டிருப்பாள். வெகுநேரம் என்றால், உடம்புக்குள் எரிகிற காமம் அணைந்து போகிறவரை, இதற்காகவே அவள் பஞ்சவடிக்கு வருவாள்.
அவள் வசிக்கிற தண்டகாரண்யம் வழியாகத்தான் கோதாவரி ஓடுகிறது என்றாலும், காற்றில் ஒன்றை யொன்று உரசியபடி ஆடும்ஆச்சா பனை மரங்களைப் பார்த்துக் கொண்டே நனையும்போது ஏற்படுகிற திருப்தி – அவள் கணவனோடு சேர்ந்திருக்கும் போது கிடைத்ததாகவே எண்ணுகிறாள். இந்த உணர்வு வெறும்பி ரமையாகக்கூட இருக்கலாம். அதனால் என்ன?
அன்றும் பஞ்சவடிக்குத்தான் வந்து கொண்டிருக்கிறாள். அது மார்கழி. எலும்பையும் ஊடுருவுகிற குளிர்மாதம். நீர்பறவைகளும் குளிருக்குப் பயந்து நீரில் குதிக்காமல் கரைகளில் குந்தியிருக்கின்றன. பனி ஒத்துழைக்காததால் தாமரையின் இதழ்கள் கருகி உதிர்ந்து விட்டதால் மிச்சமிருப்பது வெறும் தண்டு.
பஞ்சவடியை நெருங்கிவிட்டதற்கு அடையாளமாய் தாழைமலர் வாசம் நாசியை வருடுகிறது.
தூரத்தில் வரும்போதே கோதாவரிக் கரையில் புதிதாக பர்ண சாலை முளைத்திருப்பதைக் கவனித்து விட்டாள் சூர்ப்பனகை. அளவில் பெரியதாக, வெகு நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்தது. இது எவனாவது முனிவனின் வேலையாக இருக்கும். இந்த வனத்துக்கு நான் அரசி என்னைக் கேட்காமல் இப்படியொரு காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறான் இந்த முனிவன்கள் இயல்பாகவே திமிர் பிடித்தவன்கள். இவன்கள் மேல் இரக்கமே காட்டக் கூடாது. பாட்டி தாடகை, விஸ்வாமித்திரன் யாகம்தானே நடத்த வந்திருக்கிறான். போகட்டும் என்று விட்டதால் தானே அவள் சாகும்படியாயிற்று.
சற்று வேகமாகவே நடக்கிறாள் சூர்ப்பனகை. படர்ந்த மார்பும், பருத்த தொந்தியுமாக, சிறு குன்றுபோல் இருக்கும்அவளுடைய வேகமான நடையால் அதிர்கிறது பூமி. கொன்றை மரத்திலிருந்து பூக்கள் உதிர்கின்றன மாங்கனி களும், பலாப்பழங்களும் கூட விழுகின்றன. கனிகள் விழுகிற சத்தம் கேட்டு வண்டாழ்வான் குருவி திரும்பிப் பார்த்துச்சின்னதாய் மிழற்றிற்று.
பர்ணசாலையைப் பிய்த்து எறிந்துவிடும் ஆவேசத்தோடு நடந்த சூர்ப்பனகை பொங்குகிற பாலில் நீர் தெளித்தும் அடங்குவதுபோல சிலையாக நின்று விட்டாள். என்ன ஆயிற்று அவளுக்கு? அவள் கண்கள் ராமனைப்பார்த்து விட்டன. மதிரா சாராயத்தைப் போல் சிவந்திருக்கும் அந்தக் கண்களில் எழுத்தில் அடைபடாத ஆச்சர்யம் இருந்தது.
கம்பீரமாய், கறுப்பாய், நீலக்கல்லின் மினுமினுப்போடு இருக்கும் இவன் யார்? நிச்சயம் முனிவனாக இருக்க முடியாது. முகக்காந்தி மன்னவன் என்கிறது. மன்னவன் எதற்காக மரவுரி தரித்துக் காட்டில் வாழவேண்டும்
அவன் பூக்களைத் தொட்டுப் பறிக்கிற ஒவ்வொரு முறையும் என் உடம்பு சிலிர்க்கிறதே! என்னை சிலிர்க்க வைப்பதற்காகவே பிரம்மன் இவனை சிருஷ்டித்திருப்பனா? மழைக்காலம் போய் பனிக்காலம் அரக்கர்களுக்கு ஆகாது என்று வேதம் இத்தனை நாளாய் பொய்தானே சொல்லி வந்திருக்கிறது.
கணவன் வித்யுந்மாலியைத் தழுவிய கைகளால் இன்னொருவன் மார்பைத் தழுவுவதில்லை என்ற சூர்ப்பனகையின் விரதம் இன்று முறிந்தது. அவள் கைகள் இராமனைத் தழுவப் பரபரக்கிறது. கணவனைக் கொன்ற தமை யன் இராவணனைப் பழிவாங்கவே இன்னும் உயிரோடு இருப்பதாக அதிகமாக மது குடித்து விட்டுப் புலம்புகிற சூர்ப்பனகை, இன்று மது அருந்தாமலே நான் ஜென்மம் எடுத்தது இந்தக் கறுப்புச் சூரியனுக்கு என்று பிதற்றுகிறாள்.
இராமன் மலர் பறிப்தற்கு சற்று தள்ளி – கரிய பாறை மீது ஒரு மாங்கனியைச் சுவைத்தபடியே ஓடுகிற கோதாவரியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் சீதை. அவளும் மரவுரிதான் தரித்திருந்தாள். அரண்மனை தனக்கு இல்லாமல் போயிற்றே என்ற வருத்தம் அவளிடம் கொஞ்சமும் இல்லை. அவள் கண்க ளில் ஒரு கர்வம் உட்கார்ந்திருந்தது. அது இராமனை கணவனாய் அடைந்ததற்காகவே, அல்லது அவன் தம்பி இலட்சுமணனை அடிமையாகப் பெற்றதற்காகவே இருக்கலாம்.
குளிருக்கு இதமாய் இருக்கட்டுமே என்று இலட்சமணன் மூட்டிய நெருப்பு அருகில் எரிந்துக் கொண்டிருந்தது. அதில் இடது கையைக் காட்டி சூடேற்றிக் கன்னத்தில் ஒற்றிக் கொள்கிறாள் சீதை.
இந்தக் காட்சியைப் பார்க்கிறாள் சூர்ப்பனகை. இவள் யாராக இருக்கும்? மலர் பறிப்பவனோடு வந்திருப்பாளோ?தளர்ந்து போய் ஒருவிதப் பெருமித பூரிப்போடு இருக்கும் நிலையே சொல்லுகிறதே. இரவு முழுவதையும்துணையோடு கழித்திருக்கிறாள் என்பதை. இராமனின் விலாப்புரத்திலும் நகக்குறிகள் இருப்பதைக் கவனித்தாள் சூர்ப்பனகை. காம நெருப்போடு பொறாமை நெருப்பும் சேர்ந்து கொண்டது. தானும் இப்படி அவன் உடம்பில் நகக் குறியை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசை சுமந்தாள்.
அவள் நகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறத்திற்கு சமம். அவள் விரல் நகங்கள் மிகப் பெரியதாக இருந்தால் தான் சூர்ப்பனகை என்ற பெயரையே அவன் பாட்டன் மால்யவரன் அவளுக்குச் சூட்டினாள். இந்த நகம் சல்லாப ஆவேசத்தில் ஏற்படுத்துகிற காயத்தால் காதலன் உயிர்கூடப் போய்விடலாம்.
இத்தனை நாளும் மிருகங்களைக் கிழித்துத் துவம்சம் பண்ணிய தன் நகங்களை நினைத்துக் கர்வப்பட்டவள் முதல் முறையாக வருந்தினாள். மல்லிகைப் பூலின் இதழ்களைப்போல் சின்னதாய் இருக்கும் சீதையின் நகத்தை பொறாமையுடன் பார்த்தாள்.
சீதையின் ஒட்டிய வயிறும், பலமான காற்றடித்தால் ஒடிந்து விடக்கூடிய சின்ன இடையும், ஒல்லியான உருவமும் சூர்ப்பனகைக்கு பிடிக்காத விஷயங்கள் என்றாலும் – தன் மனதைக் கலைத்த இவனுக்கு (இராமன்) அதுதான் பிடிக்கும் என்றால் தன்னை மாற்றிக் கொள்ளவும் அவள் தயாராக இருந்தாள்.
சீதையைவிட அழகான மேனி வேண்டுமென்று மகாலட்சுமியை வேண்டி விரும்பிய வடிவத்தை வாங்கினாள். பூமி அதிரவே நடந்து பழக்கப்பட்ட அவள் மலருக்கும் வலிக்காத நடை நடந்து இராமனை நோக்கி நாணமுடன் சென்றாள்.
தன்னை நோக்கி வரும் சூர்ப்பனகையை பார்த்த இராமனுக்கு விழி விரிகிறது. எந்த முனிவனின் மகளோ இவள்?எதற்காக என்னை நோக்கி வரவேண்டும்? சீதையை விட அழகான பெண் இந்தப் பாரினில் இல்லை என்ற என் எண்ணத்தை பொசுக்கவா.
இராமனின் அருகில் வந்த சூர்ப்பனகை அவன் திரண்ட தோள்கள், ரோமம் படர்ந்த மார்பு, யாரையும் கவ்வி இழுக்கிற கண்கள், வில்பிடித்து வீரம் ஏறிய கைகள் புன்னகையை ஓரத்தில் சிந்தி விடுகிற உதடு எல்லாவற்றை யும் ஆசை தீர பார்த்து முடித்தாள். ஆனாலும் தாகம் அடங்கவில்லை.
தவறிப்போன பிள்ளை கிடைத்ததும் அதை எதிரில் நிறுத்தி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் அன்னையைப்போன்றிருந்த சூர்ப்பனகையின் செய்கையால் தாய் கோசலையை நினைத்துக் கொண்ட இராமன் யாரம்மா நீ? என்று கேட்டாள்.
தான் அரக்கி என்பது தெரிந்தால் வேண்டாமென்று மறுத்துவிடுவானோ என்ற பயம் சூர்ப்பனகைக்கு ஏற்படத்தான்செய்தது. என்றாலும், தான் காதலிப்பவனிடம் பொய் சொல்ல அவள் மனம் சம்மதிக்கவில்லை. நான் இலங்கேஸ் வரன் ராவணின் தங்கை. என் பெயர் சூர்ப்பனகை. உம்மைப் பார்த்தது முதல் என் மனம் உம்மைக் கணவனாக நினைத்துக் கொண்டு விட்டது. என்னைத் தழுவி என் ஆவலைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றாள்.
“அரக்கி என்கிறாய், இத்தனை ரூபவதியாக இருக்கிறாயே!
“உமக்காகத்தான் என் தவ வலிமை முழுவதையும் தாரை வார்த்து மகாலட்சுமியிடம் அவள் அழகைப்பெற்றிருக்கிறேன். அருகில்தான் என் அரண்மனை. இந்த வனமே அஞ்சி நடுங்கும் என்னை, உங்கள் அடிமையாக்கிவிட்ட காதலுக்கு மரியாதை செய்வோம், வாருங்கள்.
“எனக்கு மணமாகிவிட்டது பெண்ணே.”
“இருக்கட்டும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஆண்கள் மனைவியாக்கிக் கொள்வது ஒன்றும் புதிய வழக்க மில்லையே! வானலோகமே பாராட்டுகிற தசரத மாமன்னருக்கு அறுபதினாயிரம் மனைவியர் தெரியுமல்லவா?”
தந்தை பெயரைக் கேட்டதும் இராமனின் முகம் நெருப்பில் எறிந்த மலராய் வாடியது. அதைப் பார்த்த சூர்ப்பனகைக்கு மனசு துடித்தது.
“தவறு பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தநான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டாள்.
“எனக்காக எது வேண்டுமென்றாலும் செய்வாயா?”
“உங்களை மறப்பது என்பதைத் தவிர, உங்கள் அருகாமையிலிருந்து விலகிப் போக வேண்டும் என்பதைத் தவிர, எதை வேண்டுமானாலும் செய்வேன்.”
சூர்ப்பனகையின் காதலில் இருந்த தீவிரத்தைக் கண்ட இராமன் சீதையை நோக்கித் திரும்பினான்!
“ஏன், அந்தப் பெண் நம் காதலுக்குத் தடையாக இருக்கிறாள் என்று பார்க்கிறீர்களா? இந்த உலகமே நமக்குத்தடையாக வந்தாலும் ஒரு நொடியில் அதை நிர்மூலமாக்கிவிட என்னால் முடியும். இன்னும் என்ன யோசனை?
“அந்த நல்லவள் என் மனைவி சீதா. நான் தசரத மாமன்னன் மகன் இராமன்.”
“அந்த இராமன் தாங்கள்தானா! என் பாட்டி தாடகையைக் கொன்று துளைத்தது தாங்கள் விட்ட அம்பா?”
“ஆமாம்.”
“கருணை மிக்க தாங்கள் கொன்றீர்களா? நம்ப முடியவில்லை!”
“அது முனிவர் விஸ்வாமித்திரரின் சாபத்துக்கு அஞ்சிச் செய்த பாதகம். இனியும் ஒரு பாவம் செய்ய நான் தயாராக இல்லை கட்டிய மனைவியைக் கண் கலங்க விடும் பாவத்தை நான் செய்யாமல் இருக்க நீதான் உதவ வேண்டும் சூர்ப்பனகை.”
“சொல்லுங்கள்.”
“என்னை நம்பி வந்த அவளை நான் தள்ளி வைக்க முடியாது. நீ என்னை மறந்துவிடு. கணவனைப் பங்கு போட எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள்.”
“அவள் தடை சொல்லவில்லை என்றால், உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
“உன் அழகுக்கு இந்தப் பூலோகமே உன் பின்னால் அணி வகுக்கும் சூர்ப்பனகை. ஆண்களைக் கிறங்கடிக்கிற அழகான உன்னால் மட்டும் சக்களத்தியின் உபத்திரவத்தைப் பொறுத்துக் கொள்ள முடியுமென்றா நினைக்கிறாய்? நீஎன்னை உண்மையாகக் காலிக்கிறாய் என்ற நான் சொல்வதைத் தட்டக்கூடாது.”
“என் காதலைச் சந்தேகித்துவிட்டீர்கள் அல்லவா?” கேட்கும்போது அழுது விடுவாள் போலிருந்தது.
“நிச்சயமாக இல்லை சூர்ப்பனகை. இந்தப் பிறவியில் சீதாவைத் தவிர இன்னொரு பெண்ணை மனதாலும் தீண்டுவது இல்லை என்று சபதம் எடுத்திருக்கின்றேன். என் தம்பியும் என்னோடு இங்குதான் இருக்கிறான். நீ கணவன் இல்லாமல் தவிப்பது போல், அவன் மனைவி இருந்தும் தனிமையில் வாழ்கிறான். அவனை திருமணம் செய்துகொள்ளேன்.”
படமெடுக்கும் நாகப்பாம்பின் சீற்றத்துடன் “ஆண்களுக்கு பஞ்சம் ஏற்பட்டதால் நான் உங்களிடம் காதலை யாசிக்க வில்லை” என்றாள். அவள் முகத்தில் கோபம் வெடித்தது.
‘நான் வேசியில்லை’ என்று பார்வையால் புரியவைத்த சூர்ப்பனகை, “இந்த வார்த்தையை வேறு யாராவது சொல்லியிருந்தால் உயிரைப் பறித்திருப்பேன்” என்றாள்.
“நான் வேறு என் தம்பி வேறு என்று நான் எப்போதுமே எண்ணியது கிடையாது சூர்ப்பனகை. நீ என் தம்பியோடு, இணையச் சம்மதித்தால் அவன் விரகதாபத்தை ஒட்டியதற்கான சந்தோஷத்தை நான் பெறுவேன்.”
“எது, நான் உங்கள் தம்பியோடு வாழ்ந்தால் உங்கள் மனம் சந்தோஷப்படுமா? சொல்லுங்கள். உங்கள் தம்பி இப்போது எங்கே இருக்கிறான்?”
அவன் என்னைவிட அழகன். காலை நேரச் சூரியன் அவன் நிறத்திடம் தோற்கும்.”
“அவன் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் ஒரு கரடியைக் காட்டி, இதுதான் என் தம்பிஎன்றால் அதற்கும் இணங்குகிறேன். எனக்கு உங்கள் சந்தோஷம் முக்கியம்” என்றாள் சூர்ப்பனகை. இப்படிசூர்ப்பனகையை பேசவைத்த தன் மேல் வைத்திருப்பது மிதமிஞ்சிய காதல் என்பதை இராமனும் புரிந்துக்கொண்டான்.
ஏகபத்தினி விரதனான இராமனால் என்ன செய்து விடமுடியும்? சூர்ப்பனகை இங்கிருந்து போய்விட்டால் போதும்என்று நினைத்த இராமன் இலட்சுமணன் நின்ற திசையைக் காட்டி விட்டாள்.
வன்னி மரத்தை வேரொடு சாய்த்து கோடாரியால் விறகு கிழித்துக் கொண்டிருந்தான் இலட்சுமணன். அடுப்பு எரிக்க வியர்வை சொட்டச் சொட்டச் விறகு கிழிப்பவனை எட்ட நின்று கவனித்த சூர்ப்பனகை “ஏய் இங்கு வா” என்றாள்.
குரல் கேட்டு ஓங்கிய கோடாரியை இறங்காமல் திரும்பிப் பார்த்த இலட்சுமணன், “யார் நீ?” என்று கேட்டான்…. முகத்தில் ஆச்சர்யம் காட்டி!
“அது உனக்கு அவசியமில்லை. என்னைத் தழுவி என் விரகதாபத்தை விரட்டு. உன் அண்ணன் இராமர் சந்தோஷப்படுவார்” என்றாள்.
“என்ன செல்கிறாய் நீ”
தன் அழகான மூக்கை நிமிண்டியபடி தயங்கிய சூர்ப்பனகை, பிறகு இராமனோடு நடந்ததை சொல்லிட …
“இதுதான் நடந்தது” என்றாள்.
அதைக்கேட்ட இலட்சுமணன் விஷமமாய்ச் சிரித்தான்.
“நான் அவர் அடிமை. எனக்கு நீ மனைவியானால் அந்தச்சீதைக்கு நீ அடிமை வேலை செய்ய வேண்டும். உனக்கு அது முடியுமா? உன் அழகின் நிழலுக்குக்கூட ஈடாகாத சீதை அருகில் இருந்ததால் என் அண்ணன் உன்னை விரும்பாதது போல நடித்திருப்பார். அந்தச் சீதையை நீ காட்டை விட்டே விரட்டிவிடு. என் அண்ணன் உன்னை தலையில் வைத்துத் தாங்குவார்” என்றாள்.
அபலை சூர்ப்பனகை இலட்சுமணன் சொன்னது அத்தனையும் உண்மை என்று நம்பினாள். பஞ்சவடியை விட்டு என்ன, இந்தப் பாரிலிருந்தே அனுப்பி விடுவதாய்ச சூளுரைத்தாள். இராமன் என்கிற சொர்க்கம் இனி எப்போதும் தன் அருகில் இருக்கும் என்ற கனவைச் சுமந்தபடி சீதையைக் குறி வைத்து நடந்தாள்.
ஆற்றின் அந்தப் பக்கம் சிறகு விரித்து நடனம் போடும் காட்டுச் சேவலின் துள்ளலை ரசித்தபடி இருந்த சீதாவை -வேட்டையைக் குறிவைத்துப் பாயும் புலியின் ஆக்ரோஷத்தோடு வரும். சூர்ப்பனகையின் ஆவேசம். நடுங்கச் செய்தது. ‘ஐயோ’ என்று அலறியபடி எழுந்து ஓடிய சீதா, இராமன் பின்னாள் பதுங்கிக் கொண்டாள்.
சீதை எங்கு போய் பதுங்கினாலும் சூர்ப்பனகை விடுவதாயில்லை. அவள் ஒன்றை முடிவு செய்விட்டாள் என் றால் அது விஷ்ணுவின் விரலிலிருந்து புறப்பட்ட சக்ராயுதம் போலத்தான் காரியத்தை நிறைவேற்றாமல் ஒய்வதில்லை.
காலபாசத்தைப் போல் சீதையின் உயிரை வாங்கிவிட ஓடிவரும் சூர்ப்பனகையைப் பார்த்த இராமன், அவளை தடுத்து, “சூர்ப்பனகை, என்ன இது?” என்று கேட்டாள்,
அத்தனை ஆவேசத்திலும், தடுப்பது இராமனாயிற்றே என்று நின்று, “எல்லாம் உங்கள் தம்பி விளக்கமாக சொன்னான். இவள் கிழிபடுவதைப் பார்க்கப் பிடிக்கவில்லை என்றால் கண்களை மூடிக்கொள்ளுங்கள்” என்றாள்.
சீதை இராமனின் இடது தோளை இறுக்கமாய்ப் பற்றிய படியே குளிருக்கு நடுங்கும் கோழிக் குஞ்சாய் ஒடுங்கி னான். இராமனின் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
எங்கே இராமன் நம்மைக் கைவிட்டு விடுவானோ என்றபயம் முகத்தில் படர்ந்தது. இன்றொடு செத்தோம் என்று முடிவெடுத்த சீதா எதுவும் நடக்கட்டும் என்று கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள்.
பிறகு….
சீதை கண்களைத் திறந்தது. அந்த அலறல் சத்தத்தைக் கேட்டுத்தான். சீதைக்கும் சற்று தூரத்தில் உருவிய வாளுடன் வேட்டைக்காரனாய் இலட்சுமணன். வாளிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. சூர்ப்பனகை ஓடிக்கொண்டிருக்கிறாள்.
இதயத் துடிப்பு அதிகமாக …. சிறு நம்பிக்கை மனதில் துளிர்க்க, ” என்ன நடந்தது?” என்று கேட்டாள் சீதை.
“அவள் உன்னைவிட அழகி என்ற காரணத்தினால் தானே சீதா உனக்குப் பயம் ஏற்பட்டது. சூர்ப்பனகையை மூளியாக்கி விட்டேன். இலட்சுமணனை விட்டு அவள் மூக்கை அறுக்கச் சொன்னேன்” என்றான் இராமன்.
எங்கிருந்தோ ஓடி வந்து சீதையின் பக்கத்தில் நின்ற கலைமானை முதுகில் தடவிக் கொடுத்தபடி, ” இலட்சுமணன் காதையும் சேர்த்து அறுத்தாராக்கும்?” என்று கேட்டாள். சீதா சற்றே நகைத்தப்படி.
சீதையின் இளமைத் தீண்டலால் கிளர்ச்சியடைந்திருந்த இராமன் – விறகு கிழிக்கும் வேலையைத் தொடரும்படிஇலட்சுமணனுக்க ஆணை பிறப்பித்துவிட்டு சீதையை அள்ளிக் கொண்டு பர்ண சாலைக்கு நடந்தான்… லவன் பிறப்புக்கு அச்சாரம் போட!
மூக்கறுப்பட்ட இடத்திலும், செவிகிழிந்த பகுதியிலும் இரத்தம் பாய கோதாவரிக்கரை யோரமாய் ஓடிக்கொண்டி ருக்கிறாள் சூர்ப்பனகை. கோதாவரி சிவப்பாகியது. இராமன் மூக்கரியச் சொன்னான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அதற்காகத் தன் காதுகளைச் சந்தேகிக்க அவள் தயாராக இல்லை.
மானுடர்கள் எப்போதுமே நம்பிக்கைத் துரோகிகள்!
கணவன் வித்யுந்மாலியை நினைத்துக் கொண்டாள். அவன் மேக மண்டலத்தில் இருந்து எட்டிப் பார்த்து ‘காயம் வலிக்கிறதா சூர்ப்பனகை?” என்று கேட்டாள். சூர்ப்பனகை இராமன் மீது ஏற்பட்டிருந்த காதலைக் கொன்று புதைத்தாள்.
ஜனஸ்தானத்தை ஆண்டு கொண்டிருக்கும் தமையன்கள் கரண், தூஷணன், திருதரண் மூவரின் முன்னால் சென்று விழுந்தாள். இரத்தம் இன்னும் பாய்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.
மூக்கறுப்பட்ட தங்கையைப் பார்த்த சகோதரர்கள், “இந்தக் காயம் எப்படி ஏற்பட்டது சூர்ப்பனகை?” என்று கேட்டனர்.
சொன்னாள். அண்ணன்கள் ஆவேசமானார்கள். இராமனை அழித்துவிடப் புறப்பட்டனர்.
இராமன் சூர்ப்பனகையின் அண்ணன்களையும், அவர்களோடு சென்ற பதினாலாயிரம் படை வீரர்களையும் தனி யொரு வனாய் நின்றே கொன்று குவித்தான்.
படைகளும், தமையன்களும் செத்துக் குவிவதைப் பார்த்த சூர்ப்பனகைக்கு இலங்கேஸ்வரன் நினைப்புக்கு வந் தான். அவள் முகத்தில் சந்தோஷம் படர்ந்தது. திக் விஜயத்தின்போது ஏற்பட்ட போரில் தன் கணவனைக் கொன்றராவணனை, ராமனை பகடையாக்கிப் பழிவாங்க முடிவு செய்தாள். அதே நேரத்தில் மனைவியைப் பாதுகாக்கத்தெரியாத பேடி என்ற அவச்சொல்லை ராமனுக்கு ஏற்படுத்தி அவன் முகத்தில் கரிபூசவும் திட்டம் வகுத்தாள்.
ராமன் மீது ஏற்பட்ட காதலை சூர்ப்பனகை நாகரிகமாகத்தானே வெளிப்படுத்தினாள். அவள் மூக்கை அறுத்தது எந்த வகையில் நியாயம்? சூர்ப்பனகையைப் பிடிக்கவில்லை என்றால், இஷ்டமில்லை என்று ஒரே வார்த்தை யில் மறுத்திருக்க வேண்டியதுதானே. அண்ணனும் தம்பியும் ஆசைதீர கேலிபேசி விளையாட – சூர்ப்பனகை என்ன இருவருக்கும் அத்தை மகள் உறவா?
விளையாட்டு அலுத்ததும் தலைவேறு கால்வேறாய் குழந்தைகள் பிய்த்து எறியும் ஜடப்பொம்மை என்று சூர்ப்பன கையை நினைத்துவிட்டான் போலிருக்கிறது ராமன். சிறு வயதில் மந்தரையின் கூனை மண் உருண்டை யால் தாக்கி வைத்தது போல சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து – தன் வக்கிர உணர்வுக்கு வடிகால் தேடிய ராமனின் வம்சத்தை அறுவடை செய்ய அண்ணன் இராவணனை சந்திக்கப் புறப்பட்டாள் இலங்கையை நோக்கி.
மூக்கும் , காதும் இல்லாமல் வடக்குக் கோபுரவாசல் வழியாக, வரும் தங்கை சூர்ப்பனகையைப் பார்த்த இரா வணன் பதறினான். கொலு மண்டபத்திலிருந்து இறங்கி தங்கையின் அருகில் வந்தான்.
“சூர்ப்பனகா, என்னம்மா நடந்தது?”
“அண்ணா!” இதற்குமேல் சூர்ப்பனகைக்கு பேச்சு வரவில்லை.
“சொல் தங்கையே! உன்னை இப்படி பங்கப்படுத்தியது யார்?”
“ஒரு மானுடன்” இப்படிச் சொல்லும் சூர்ப்பனகையை ஆழமாய்ப் பார்த்த ராவணன். “நீ மது அருந்திவிட்டுப் பேச வில்லையே?” என்று கேட்டான்.
“அவன் மிகுந்த பராக்ரமசாலி அண்ணா, அவனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள். பத்து திருமகள் சேர்ந்தாலும் அவள் அழகுக்கு ஈடாக முடியாது. அவளை உனக்குப் பரிசளித்தால் நீ மகிழ்வாய் என்று அவளைத் தூக்க முயன்றேன். என்னை இப்படி ஆக்கிவிட்டான் அவள் புருஷன்” என்றாள்.
“அவள் எப்படி இருந்தாள் என்றாய்?”
“அவள் கண்கள் காதளவு நீண்டிருந்தது. பொன்னை உருக்கிச் செய்தது போல் நிறம். குங்கிலியப் புகைபோல் அலைஅலையாய் நெளிகிற கூந்தல். தென்றல் தீண்டினாலே வலிக்கிற அளவுக்கு மென்மையான உடம்பைப் பெற்றிருக்கிறாள். நிலாகூட அவள் கண்கள் முன்னாள் தோற்றுத்தான் போக வேண்டும். அவளை மட்டும் நீ கவர்ந்து வந்து விட்டால், பதினாலு லோகமும் உனக்கு அடிமையாக விட்டது போலத்தான். ஒரு தடவை நீ அவளைத்தழுவினால் போதும் அண்ணா இந்திரனைவிட மேலான போகத்தை அனுபவித்தவனாவாய்!” என்று பேச்சிலேயேபோதை ஏற்றினாள். இராவணனின் காது வழியாக காதலைப் பாய்ச்சினாள். இராவணன் பார்க்காத சீதை மேல்பைத்தியமானானன். சன்னியாசி வேடமிட்டு வந்து – சீதையைத் தூக்கிச் சென்றான்.
மாரீச மான் வேட்டைக்குப் போன இராமன், திரும்பி வரும்போது மனைவியைக் காணவில்லை. “ஐயோ! என்று அரற்றினான். காடு மேடெல்லாம் தேடி அலைந்தான். அவன் உள் மனசு, ‘கட்டியவளைக் களவு கொடுக்காமல் காப்பற்றத் தெரியாத உனக்கு ஏன் கல்யாணம்’ என்றது. சூர்பபனகையின் மூக்கை அறுத்தது சட்டென நினைவுக்கு வந்தது. அவன் வலதுகை அனிச்சையாய் மேலே சென்று மூக்கைத் தடவிப் பார்த்துக் கொண்டது.