சென்னை: கட்ட பஞ்சாயத்து செய்வது எங்க வேலை இல்லை  என நடிகை கவுதமிக்கு தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் இராம. சீனிவாசன் பதில் தெரிவித்து உள்ளார்.

பாஜக நிர்வாகியான பில்டர் அழகப்பன் தனது சொத்தை ஏமாற்றி பறித்துக்கொண்டதாகவும், அவர்மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இந்த பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, கவுதமி ஏற்கனவே கொடுத்த நிலஅபகரிப்பு மற்றும் மிரட்டல் புகாரின் பேரில், பில்டர் அழகப்பன் அவரது மனைவிமீது காவல்துறையினர் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் கவுதமி புகார்  தொடர்பாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன்   தனியார் டிவி சேனல் ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.  அவர் கூறுகையில், “அவரது எந்த அரசியல் பணிக்காகக் கட்சி துணை நிற்கவில்லை என்று எனக்குப் புரியவில்லை. நிலத்தை அபகரிப்பது என்பது சட்ட விரோதமான செயல். அதற்கு நிலத்தை அபகரிப்பு வழக்கு தொடரலாம்.

இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாரா.. வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதா என்பதை நாம் பார்க்க வேண்டும். அப்படி அவர் புகார் அளித்திருந்தால் இது சட்ட ரீதியான பிரச்சினை தான். இதில் கட்சி எங்கே வந்தது. ஒருவரின் நில பிரச்சினை, கடன் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்கவா கட்சி என்ற அமைப்பு இருக்கிறது என கேள்வி எழுப்பியவர்,

இந்த நில விவகாரத்தில் யார் செய்தது தவறு.. இவர் மீது நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கட்சிக்கு எப்படித் தெரியும். நில விவகாரம் என்றால் இரு தரப்பிலும் பிரச்சினை இருக்கலாம். அதில் கட்சி தலையிட முடியாது. நில அபகரிப்பு என்றால் சட்ட ரீதியான நடவடிக்கையை அவர் எடுக்கலாமே.. ஏன் அவர் அதை எடுக்கவில்லை.ஹ

இதற்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பியதுடன், கட்டப் பஞ்சாயத்து செய்வது கட்சியின் வேலை இல்லை என்றவர், ஒருவர் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இல்லை என வைத்துக் கொள்ளுங்கள்.. அவரது நிலத்தை அபகரித்துவிட்டார்கள் என வைத்துக் கொள்வோம். அவருக்குத் தமிழ்நாட்டில் நிதி கிடைக்க வாய்ப்பே இல்லையா? போலீசார், அவர் சொன்ன நில பிரச்சினை புகார்களை எல்லாம் போலீஸ் நிலையத்தில் கொடுத்தால் நல்லது” சட்டம், நீதிமன்றம் எல்லாம் பாதிக்கப்பட்டவருக்காக நிற்கும். அதில் என்ன பிரச்சினை.

கவுதமி தனது நில அபகரிப்பு புகாரை, சட்ட ரீதியாக எதிர்கொள்வதை விட்டுவிட்டு ஏன் கட்சியை இதில் இழுக்கிறார் எனப் புரியவில்லை என்றவர், பாஜக என இல்லை.. எந்தவொரு அரசியல் கட்சியிலும் யார் வேண்டுமானாலும் கட்சியில் உறுப்பினராகச் சேரலாம்.. யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம். அப்படி கட்சியில் இருந்து விலகுவதாக இருந்தால் தாராளமாக விலகிக் கொள்ளலாம். அதிலும் 20, 25 ஆண்டுகள் கட்சியில் இருக்கிறேன் என்கிறீர்கள். உங்கள் பங்களிப்பிற்கு நன்றி என மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.  வாழ்த்துகள்.

இவ்வாறு கூறினார்.

கவுதமி பாஜகவில் இருந்து விலகல் எதிரொலி: பில்டர் அழகப்பன் மீது காவல்துறை வழக்கு பதிவு…