ராமேஸ்வரம்,

மிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நாளை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து  பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மேலும், மீனவர் பிரிட்ஜோ படுகொலைக்கு நீதி வேண்டும். அவரை சுட்டுக் கொலை செய்த இலங்கை கடற்படை யினரை கைது செய்து இந்திய சிறையில் அடைக்க வேண்டும். இலங்கை அரசிடம் இருந்து ரூ.1 கோடி இழப்பீடு பெற்று மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்றும்,

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 128 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், ஈரான் நாட்டு சிறையில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி மீனவர்களையும் மீட்க வேண்டும் என்றார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் நாளை  ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

இவ்வாறு அவர் கூறினார்.