சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக கட்டாரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றது. 2018ம் ஆண்டு இந்த சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. சங்கத்துக்கான தலைவர், துணைத் தலைவர், இயக்குநர்கள் பதவிகளில் அதிமுகவினரே உள்ளனர். இதில் முறைகேடு நடைபெற்ற திமுக குற்றம் சாட்டி வந்த நிலையில், ஆட்சிக்கு வந்ததும், கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிக்காலத்தை 3ஆண்டுகளாக குறைத்து திருத்த மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த ஜனவரி 7ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். இதற்கு சமீபத்தில் (ஜூலை) கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.
இதையொட்டி, மீண்டும் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தும்பொருட்டு, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக தயானந்த் கட்டாரியா IAS நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையராக பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியாவை நியமிப்பதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் உத்தரவின்பேரில், தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி புதிய அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளது.