சென்னை: டெல்லியில் த.வெ.க தலைவர் விஜயிடம் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவடைந்தது. இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற விசாரணை சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது.

கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பான வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. ஏற்கனவே கரூர் சம்பவம் நடைபெற்ற பகுதியில் விசாரணை நடத்திய அதிகாரிகள், பொதுமக்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரிடம் விசாரணை நடத்திய நிலையில், முக்கிய அதிகாரிகள், மற்றும் தவெக முக்கிய தலைவர்களை டெல்லி சி.பி.ஐ அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய்யும் ஆஜராக சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
ஏற்கனவே பொங்கலுக்கு முன்பு முதன்முதலில் விஜயிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் நேற்று (ஜனவரி 19ந்தேதி) இரண்டாவது முறையாக மீண்டும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் ஐந்தரை மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. விசாரணையின்போது, விஜயிடம் பல்வேறு கேள்விகளை எபப்பியதாக கூறப்படுகிறது.
அதாவது, கரூரில் நீங்கள் பொதுமக்களை நோக்கி குடிநீர் பாட்டில்களை தூக்கி வீசும்போது கூட்ட நெரிசலை கவனிக்கவில்லையா? நெரிசலை தடுக்க, வாகனத்தை நிறுத்தியிருக்கலாம்; ஆனால், தொடர்ந்து பரப்புரை செய்துள்ளீர்கள் ஏன் என்றும், கூட்ட நெரிசலுக்கு இடையே உங்களுடைய பரப்புரை வாகனம் முன்னேறி உள்ளன என கேள்விகளை எழுப்பியதுடன், நீங்கள் பிரபல நடிகராக இருக்கும் நிலையில், , அரசியல் கட்சி தலைவராக இருக்கும்போதுரு, உங்களுக்கு எவ்வளவு கூட்டம் கூடுமென தெரியாதா?
கரூர் பரப்புரை கூட்டத்திற்கு 7 மணிநேரம் தாமதமாக வர காரணம் என்ன? சாலைகளில் பல்வேறு வளைவுகள் இருந்ததால், கரூருக்கு வர தாமதம் என்றால் அதற்கான ஆதாரங்களை இன்றைக்குள் சமர்பிக்க வேண்டும் என சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், சூழல் மேலும் மோசமாகும் என காவல்துறை கூறியதால் கரூரில் இருந்து வெளியேறினேன். காவல்துறை அமைத்து கொடுத்த பாதையில்தான் கரூரை விட்டு வெளியேறினேன்.
கூட்ட நெரிசலின்போது தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கரூர் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் ஜாக்கிரதையாக செயல்பட்டிருக்க வேண்டும் என டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் கேள்விகளுக்கு தவெக தலைவர் விஜய் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “விஜயிடம் சி.பி.ஐ விசாரணை தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. குற்றப்பத்திரிக்கையில் விஜய் இணைக்கப்படுவார் என்பது போன்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. அடுத்த கட்ட விசாரணைக்கு வர சொல்லி த.வெ.க தலைவர் விஜய்க்கு சம்மன் எதுவும் கிடையாது.” என்று கூறினார்.