சென்னை:
ருணாநிதியின் முழு உருவப்படம் திறக்க வாய்ப்புகள் உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வயது முதிர்ச்சி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இந்நிலையில், அவருடைய புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவரின் நீண்டகால அரசியல் வாழ்க்கையை பறைசாற்றும் வகையிலும் சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் தலைவர்கள் பட வரிசையில் மு.கருணாநிதியின் முழு உருவப்படமும் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கருணாநிதியின் முழு உருவப்படம் திறக்க வாய்ப்புகள் உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சட்டசபையில் திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, அம்பேத்கர்,பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயலலிதா உள்ளிட்ட 15 தலைவர்கள் படம் சட்டப்பேரவை அரங்கில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் 16வது புகைப்படமாக கருணாநிதியின் முழுஉருவப்படம் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.