சென்னை: 
நாடாளுமன்றத்தில் 13 பிரச்சினைகள் குறித்து  கேள்வி எழுப்ப உள்ளோம் என்று  நாடாளுமன்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர்  டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், 19  நாள் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.  இருப்பினும் 13 பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், உபா சட்டம், தேசத்துரோக சட்டம் தேவையா என்பது குறித்தும், நாடாளுமன்றத்தில்   விவாதிப்போம்.  தடுப்பூசி பிரச்சினை,   பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில்  கேள்வி எழுப்புவோம்.  மேகதாது பிரச்சினையில் கர்நாடக முதல்வர் ஒரு மாதிரியும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரிடம் வேறு மாதிரியும் பேசுகிறார்கள்,  மேகதாது பிரச்சினை பற்றி கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வரும் என்றும், கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீகளை விவாதத்திற்கு எடுக்காமல் விடுவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி, நிலுவைத் தொகை தொடர்பாகவும் கேள்வி எழுப்புவோம் என்றார்.