மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து ஆண்களிடம் கட்டணம் வசூல் செய்த கண்டக்டர் சஸ்பெண்ட்

Must read

சேலம்:
சேலத்தில் அரசு பஸ்ஸில் பயணிக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச பயணச்சீட்டை வட மாநிலத்தவருக்கு கொடுத்து கட்டணம் வசூலித்த அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிப்படி, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது பெண்கள் இலவசமாக அரசு நகர பஸ்களில் பயணித்து வருகின்றனர். அவ்வாறு பயணம் செய்யும் பெண்களுக்கு என தனியாக பயணச்சீட்டும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சேலம் ரயில் நிலையத்திலிருந்து பழைய பஸ் ஸ்டாண்டு செல்லும் அரசு பஸ்ஸில் வடமாநிலத்தைச் சேர்ந்த 26 பேர் ஏறியுள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை கண்டக்டர் நவீன் குமார் கொடுத்து கட்டணம் வசூலித்துள்ளார். ஐந்து ரோடு அருகே அரசு பஸ் வந்த போது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது வடமாநில ஆண்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் உடனடியாக சக பயணிகளை பஸ்ஸில் இருந்து இறங்கி மாற்று பஸ்ஸில் அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வடமாநிலத்தவர் மற்றும் அரசு பஸ் கண்டக்டர் நவீன் குமார் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை ஆண் பயணிகளுக்கு கொடுத்து முறைகேடாக கட்டணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கண்டக்டர் நவீன் குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

More articles

Latest article