download (1)
 
கார்த்திக் சுப்புராஜின் “இறைவி” திரைப்படத்துக்கு  ரசிகர்களின் பேராதரவு  கிடைத்திருப்பதோடு,  “சிறந்த படம்” என்கிற பாராட்டும் கிடைத்திருக்கிறது. அதோடு, ஒரு விவகாரமும் வெடித்திருக்கிறது.
“இந்த படத்தில் தயாரிப்பாரளர்களை கேவலப்படுத்துவது போல காட்சிகளை வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்” என்பதுதான் அந்த விவகாரம்.
படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்..
“இறைவி” படத்தில்  திரைப்பட இயக்குநர் வேடத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.  அவருக்கு  தயாரிப்பாளருடன் தகராறு ஏற்படுகிறது. ஆகவே அவர் இயக்கிய படத்தை ரிலீஸ் செய்யாமல் கிடப்பில் போட்டுவிடுகிறார் தயாரிப்பாளர்.
இதனால் மனம் வெறுத்துப்போய், சதா குடித்துக்கொண்டே இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா, தயாரிப்பாளரோ,  தன்னிடம்  மன்னிப்பு கேட்டால் படத்தை ரிலீஸ் செய்வதாக சொல்கிறார்.
முதலில் முரண்டு பிடிக்கும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் தயாரிப்பாளர், “வெறும் வார்த்தையால் கேட்டால் மட்டும் போதாது…. என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று சொல்ல, எஸ்.ஜே.சூர்யா முடியாது என்று மறுத்துவிடுகிறார் சூர்யா.
இதுதான் இப்போது விவகாரமாகியிருக்கிறது.
“தயாரிப்பாளர் “ஆஸ்கார்” மூவிஸ் ரவிச்சந்திரனைத்தான்  தனது இறைவி படத்தில் சித்தரித்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்” என்று கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கிறார்கள்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக சில பிளாஷ்பேக் சம்பவங்களையும் சொல்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்  மற்றும் இயக்குநரான ரவி வர்மன்,  தயாரிப்பாளர்  ஆஸ்கார் ரவி தயாரிப்பில்  “மாஸ்கோவின் காவிரி” என்ற படத்தை ஆரம்பித்தார்.    இடையில்  அந்த படத்தை அப்படியே போட்டுவிட்டார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவி. அடுத்தடுத்தபடத்தை தயாரித்து வெளியிட்டாலும், “மாஸ்கோவின் காவிரி” படத்தை ரிலீஸ் செய்ய தாமதம் ஏற்பட்டது.
இந்த ஆதங்கத்தில்   இயக்குநர் ரவிவர்மன், ஆஸ்கார் ரவியை கடுமையாக திட்ட..  அது ஆஸ்கார் காதுக்கு போய்விட்டது.
கடுப்பான ஆஸ்கார் ரவி, மாஸ்கோவின் காவிரி படத்தை  ரிலீஸ் செய்யவே இல்லை.  நொந்துபோன ரவி வர்மன் ஆஸ்கார் ரவி ஆபிசுக்கு நடையாய் நடந்தும் பயனில்லை.  கிட்டதட்ட இரண்டு வருங்களுக்கு பிறகு  ஆஸ்காரை நேரில் சந்தித்து    மன்னிப்பு கேட்டார் ரவிவர்மன்.
அதன் பிறகே  மாஸ்கோவின் காவிரி படத்தை ரிலீஸ் செய்தார் ஆஸ்கார் ரவி.
“ஆஸ்கார் ரவியின் இது போன்ற நடவடிக்கை புதிதல்ல. ஏற்கெனவே தங்கர்பச்சான்  இயக்கிய  தென்றல் படத்தை சில வருடங்கள் கிடப்பில் போட்டார்.    ஜெயம் ரவி நடித்த பூலோகம் படத்தையும் வருடக்கணக்கில் ரிலீஸ் செய்யாமலே வைத்தார்.    அவ்வளவு ஏன்..  கமல் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விஸ்வரூபம் -2 படத்தை கடந்த மூன்று வருடங்களாக வெளியிடாமலே வைத்திருக்கிறார்” என்று ஆஸ்கார் ரவியைப்பற்றி சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
இந்த விவகாரம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க… இன்னொரு புறம், “அரசியல்வாதியிலிருந்து ஆட்டோ டிரைவர் வரை சினிமாவில் விமர்சிக்கிறார்கள்.. ஏன் நடிகர்களை கிண்டலடித்தே எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன.. தயாரிப்பாளர்களை மட்டும் விமர்சிக்க கூடாதா” என்ற குரலும் அதே கோடம்பாக்கத்தில் ஒலிக்கத்தான் செய்கிறது.