“இறைவி”  படத்தில் திரைப்பட தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்தும், அவதூறாகப் பேசியும் காட்சிகள் வைத்ததாக புகார் கூறியுள்ள தயாரிப்பாளர்கள்சிலர், அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தடைவிதிக்குமாறு  வலியுறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜுக்கு தடை விதிப்பது குறித்து தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை செய்து  வருகிறது.

"இறைவி" படத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் கார்த்திக் சுப்புராஜ் (இடது ஓரம்)
“இறைவி” படத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் கார்த்திக் சுப்புராஜ் (இடது ஓரம்)

நேற்று இறைவி படம் பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அந்தப் படத்தில் தயாரிப்பாளர்களை அவமதிக்கும் காட்சிகள், வசனங்கள் உள்ளதாகக் கூறி கார்த்திக் சுப்பராஜுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இந்த விவகாரம் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து “இறைவி” படம் குறித்து விசாரிக்க தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு ஒரு குழுவை அமைத்தார்.
இந்தப் படத்தில் தயாரிப்பாளர்களை அவமதிக்கும் காட்சிகள், வசனங்கள் எவை என்பதை இன்று இந்தக் குழு அடையாளம் காண வசதியாக ஆர்கேவி தியேட்டரில் சிறப்புக் காட்சிக்கு இன்று தயாரிப்பாளர்  ஞானவேல் ராஜா ஏற்பாடு செய்துள்ளார்.   இந்தக் காட்சியைப் பார்த்த பிறகு கார்த்திக் சுப்பராஜ் மீதான நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.