திருவண்ணாமலை: கார்த்திகை மகாதீபத்தன்று மலையேற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், கோவிலுக்குள் செல்ல பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தீபத்திருவிழாவையொட்டி 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.
கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 27ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிறப்பாக டிசம்பர் 6ந்தேதி 2668 அடி உயரமுள்ள மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். இதையொட்டி, அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்றும், பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நாளையும் நடக்கிறது. 6-ந்தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருவண்ணா மலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு திருவண்ணாமலைக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும், மகா தீபத்தின்போது வி.ஐ.பி. அமரும் பகுதி குறித்து ஆய்வு செய்தார்.
கொரோனா காரணமாக, கடந்த 2ஆண்டுகளாக பக்தர்கள் வருகைக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு தீபத்திருவிழாவின்போது 30லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பார் கோடுடன் கூடிய பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தெரிவித்து உள்ளார்.
மேலும், கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பார் கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்படும் என்றவர், அந்த பாஸை சோதனை செய்துதான் கோவிலுக்குள் அனுப்புவோம். போலி பாஸ் வைத்து கோவிலுக்குள் நுழைய முடியாது என்றும் சைலேந்திரபாபு தெரிவித்தார்.
மேலும் பரணி தீபம், மகா தீபம் ஏற்றும்போது அனுமதி அட்டை வைத்துள்ள பக்தர்கள் எந்தவித தங்கு தடையின்றி கோவிலுக்குள் சென்று வருவதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும், மகாதீபம் பார்ப்பதற்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனுமதி அட்டை இல்லாதவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பொதுமக்கள் பாதுகாப்புடன் எந்த வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்வார்கள். உள்ளூர் மக்களின் விபரங்களும், வெளியூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வருபவர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியவர், விழா தொடர்பாக மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இவ்விழா நடத்தி முடிப்பதற்கு காவல்துறை சார்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை வரும் வாகனங்கள் தணிக்கைகள் செய்யப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 4 டி.ஐ.ஜி., 27 போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 12 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றவர், பாதுகாப்பு பணிக்கு இந்த மாவட்டத்தில் முன்பு வேலை பார்த்த அனுபவம் உள்ள போலீஸ் அதிகாரிகளும் ஈடுபட உள்ளனர் என்றார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர், சாதாரண உடையுடன் மக்களோடு மக்களாக இருந்து சந்தேகப்படும் நபர்களை கண்காணித்து கைது செய்வார்கள் என்று கூறியவர், குற்றவாளிகளை அடையாளம் காண கூடிய சாப்ட்வேர் மூலம் கேமராக்களில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பாதுகாப்பு கருதி, திருவண்ணாமலையில் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியுள்ள மக்களின் விவரங்கள் மற்றும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலை வந்து தங்கியுள்ளவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இருப்பது போன்று இல்லாமல் இந்த ஆண்டு தேவையான அளவு எண்ணிக்கையிலான போலீசார் மட்டுமே கோவிலுக்குள் மகா தீபத்தின்போது இருப்பார்கள். தேவையற்ற போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றார்.
டிஜிபியின் ஆய்வின்போது வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன், கலெக்டர் முருகேஷ், வேலூர் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கோவில் இணை ஆணையர் அசோக்குமார், நகராட்சி ஆணையாளர் முருகேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.