திருவண்ணாமலை: தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை  திருவண்ணாமலையின் 2668 அடி உயரத்தில் லட்சகணக்கான பக்தர்கள்  விண்ணதிர அரோகரா கோஷம் எழுப்பிய நிலையில், மகா தீபம் ஏற்றப்பட்டது.

இன்று காலை திருவண்ணாமலை பகுதியில் மழை பெய்த நிலையிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து, சிவபெருமானின் ஆசி பெற்றனர்.

தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை வரும் இன்று (நவம்பர் 26)  உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது அனைத்து பகுதிகளில் உள்ள சிவன் கோவில், முருகன் கோவில் உள்பட அனைத்து வகையான கோவில்களிலம் சொக்கப்பனை எனப்படும் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமான நடவடிக்கை. அதன்படி, இன்று நாடு முழுவதும் திருக்கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபத்திருவிழாவுக்கு பெயர் பெற்ற திருவண்ணாமலை. அக்னிஸ்தலமான திருவண்ணாமலையில், கார்த்திகை மாதம் தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அண்ணாமலையார் குடிகொண்டிருக்கும் மலையின் உச்சிப்பகுதியான, சுமார் 2668 அடி உயரத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.  இந்த நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றது. இதைக்காணவும், இதையடுத்து, மலையை சுற்றி சிவனின் அருள் பெற பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.

இநத் நிலையில், இன்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது,  லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என விண்ணதிர பக்தியுடன் கோஷம் எழுப்பினர். முன்னதாக இன்று அதிகாலை 3.40 மணியளவில் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேத மந்திரங்களை முழங்க அரோஹரா முழக்கத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. அதற்கு முன்னதாக பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டப எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்கும் வைபவம் இடம் பெறுகிறது. 2,668 உயர மலை மீது அரோகரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் 25 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.