சிவகங்கை

நேற்று நடந்த ஒடிசா ரயில் விபத்து குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர்  அருகே நடந்த ரயில் விபத்தில் சுமார் 530 பேர் உயிர் இழந்துள்ளனர்..  நூற்றுக்கணககானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.   மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.  உயிர் இழந்தோருக்கும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம்,

”ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து வருத்தமளிக்கிறது. இது பாதுகாப்பு குறைபாட்டால் நடந்திருக்கலாம் என அஞ்சுகிறோம். அரசு ஆழமான விசாரணையை நடத்த வேண்டும். புல்லட் ரயில் போன்ற பிரதமரின் கனவுத் திட்டங்களை விட, மக்கள் பாதுகாப்பை மையப்படுத்தும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தண்டவாளத்தின் தரத்தைச் சரி செய்வது, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பது போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

உலக அளவில் பிரதமர் தன்னை முன்னிறுத்தும் திட்டங்களைக் கைவிட்டு மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். ரயில் ஓட்டுநர்கள் 12 மணி நேரத்துக்குப் பதிலாக 18 மணி நேரம் பணி செய்கின்றனர். பல ரயில்வே கிராசிங்குகளில் பணியாளர்களே இல்லை. பல பணியிடங்களுக்கு ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கின்றனர்.

வேகமாக ரயில் ஓட்ட வேண்டும் என்பதற்காக பாதுகாப்பை கவனிப்பதில்லை. ரயில் பயண நேரத்தை குறைத்துவிட்டோம் என்று பெருமை பேசவே ரயில் வேகத்தை அதிகப்படுத்துகின்றனர். மேலும், மத்திய அரசின் பல திட்டங்கள் அறிக்கையாகத்தான் உள்ளன. ஆனால், நடைமுறைக்கு வருவதில்லை. அதுபோலத்தான் ரயில்வேவில் ‘கவாச்’ பொருத்தும் அறிவிப்பும். தொழில்நுட்ப முறையில் விசாரணை நடத்த வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறுகிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இழப்பீடுகளை அதிகப்படுத்த வேண்டும். மேலும் இதில் அரசியல் பேச விரும்பவில்லை”

என்று தெரிவித்துள்ளார்.