புதுக்கோட்டை

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் தலைமை தனக்கு எந்த தொகுதியில் வாய்ப்பளித்தாலும் போட்டியிடுவதாகக் கூறி உள்ளார்.

Karti Chidambaram. Photo: Manorama/File

நேற்று மாலை சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அப்போது கார்த்தி சிதம்பரம்,

“உறுதியாக நான் சிந்தித்து உறுதியாக நம்புவது மட்டுமே நான் தெரிவிக்கும் அத்தனைக் கருத்துகளும் ஆகும்.  நான் அதில் நான் தெளிவாக இருக்கிறேன்.  என்னிடம் விளக்கம் கேட்டு யாரும் எந்தக் கடிதத்தையும் அனுப்பவில்லை.  ஒருவேளை அவ்வாறு கடிதம் வந்தால் தான் அது குறித்து பதில் சொல்ல முடியும்.

தேவை இல்லாமல் என்னைப் பற்றி, உருவாக்கப்பட்ட சர்ச்சையால் சிவகங்கையில் போட்டியிட தி.மு.க.வினரும், காங்கிரசிலேயே சிலரும் முயல்வது குறித்துக் கேட்கிறீர்கள். இதுபோன்ற போட்டிகள் ஜனநாயக நாட்டில் சகஜம்தான். காங்கிரஸ் கட்சியிலும் இதுபோல யாரும் தங்களுக்கான வாய்ப்பைக் கேட்பதில் தவறு இல்லை.

சென்ற தேர்தல் நேரத்திலும் இதேபோலத்தான் கேட்டார்கள், இப்போதும் கேட்கிறார்கள். அடுத்த தேர்தலிலும் கேட்பார்கள். என்னைப் பொருத்தவரை எம்.பி. பதவிக்குரிய பொறுப்புகளை முழுமையாக பயன்படுத்தி வேலை செய்து 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் சமமாக நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறேன்.

பலமுறை மக்களவையிலும் அரசியல் சார்ந்து பேசியிருக்கிறேன். காங்கிரஸ் தலைமை தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கும். கட்சி தலைமை தான் போட்டியிடுவதா வேண்டாமா, எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என முடிவெடுத்துச் சொல்லும். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமை எந்த தொகுதியில் வாய்ப்பு அளித்தாலும் போட்டியிட தயாராக உள்ளேன்.

ஒரு பிரதமர் ஆட்சியில் இருக்கும் போது செல்வாக்கு குறைவாக இருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது. இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்குச் செல்வாக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் இந்தி பேசாத மாநிலங்களில் செல்வாக்கு குறைவாக இருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை தி.மு.க. தலைமையிலான- காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும்”

என்று கூறியுள்ளார்.