சென்னை:

மறைந்த நடிகர் ஜெமினி கணேசன், நடிகை சாவித்ரி நடித்த கற்பகம் பட உரிமை ஏவிஎம் நிறுவனத்திற்கே சொந்தம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1963ம் ஆண்டு அமர்ஜோதி பட நிறுவனம் சார்பில் நடிகர் ஜெமினி கணேசன், நடிகைகள் சாவித்ரி, கே.ஆர்.விஜயா உள்ளிட்டோர் நடித்த கற்பகம் என்ற திரைப்படத்தை கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கினார். இந்த படத்திற்காக அமர்ஜோதி பட நிறுவன உரிமையாளர் சபரிநாதன், ஏவிஎம் நிறுவனத்திடம் 4 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

இதற்காக பட உரிமையை ஏவிஎம் நிறுவனத்திற்கு 49 ஆண்டுகளுக்கு கொடுத்திருந்தார். இந்த உரிமைக் காலம் 2012ல் முடிந்த நிலையில், கடந்த 2005ம் ஆண்டு இந்த படத்தின் முழு உரிமையும் ஏவிஎம் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தப்படி 2062ம் ஆண்டு வரை இந்த படத்தின் அனைத்து உரிமைகளும் ஏவிஎம் நிறுவனத்திற்கே சொந்தம் என அறிவிக்க கோரி ஏவிஎம் ஸ்டூடியோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் ஒப்பந்தப்படி படத்தின் முழு உரிமையும் ஏவிஎம் நிறுவனத்திற்கே சொந்தமானது என அறிவித்து உத்தரவிட்டார்.