பெங்களூரு:
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை யார் தடுத்தாலும் கட்டியே தீருவோன் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் அணை கட்டும் பணியை தொடங்க போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கர்நாடகத்தின் வாதத்தை ஏற்க முடியாது என்றும் அணை கட்டும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் பெங்களுருவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா; மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்றும் அதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேகதாது விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில் கர்நாடகாவிற்கு சாதகமான சூழல் உள்ளது. இரு மாநிலங்களும் பயன்பெறக்கூடிய திட்டம் என்பதை விளக்கி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அந்த கடிதத்திற்கு சாதகமான பதில் வரவில்லை.

எந்த ஒரு சூழலிலும் மேகதாது அணை திட்டத்தை பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதை கர்நாடக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன் எனவும் கூறினார். இதனிடையே டெல்லியில் இன்று ஜலசந்தித்துறை அமைச்சரை சந்தித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.