பெங்களூரு :

ர்நாடகாவில் நடைபெற்று வரும் அரசியல் பரபரப்புக்கு இடையே இன்று மாநில சட்டமன்றம் இனறு கூடியது. கூட்டத்தில் என்ன நடைபெறப்போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கர்நாடக மாநில அரசுக்கு எதிராக பல எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி, ராஜினாமா கடிதங்கள் கொடுத்துள்ள நிலையில், சபாநாயகர் தயவு காரணமாக, ஆட்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உச்சக்கட்ட  அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கர்நாடக சட்டமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஏற்கனவே அறிவித்த படி இன்று  தொடங்கி உள்ளது.

முன்னதாக முதல்வர் குமாரசாமி, காலையிலேயே மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தார். அதையடுத்து, தனது தந்தையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான தேவகவுடாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டசபை கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில்,  மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவை ஒத்திவைக்கப்படுவது மரபு.

ஆனால் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, மாநில அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், அங்கு அரசியல் நெருக்கடி உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக, அவையில், ராஜினாமா எம்எல்ஏக்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக கோரும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.  இந்த நிலையில், ராஜினாமா கடிதம் குறித்து, சபாநாயகர் ரமேஷ் தனது கருத்தை சபையில் தெரிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

உச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து பெங்களூரு திரும்பிய அதிருப்தி எம்எல்ஏக்கள், இன்றைய கூட்டத்துக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. ஏறக்னவே  ராஜினாமா செய்த  காங்., எம்எல்ஏ., சுதாகர் தாக்கப்பட்டதை தொடர்ந்து, அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சட்டமன்றத்திலும் ஏராளமான காவலர்கள் குவிக்கப் பட்டு உள்ளனர். இதன் காரணமாக விதான் சவுதா வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.