பெங்களூரு: பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயம் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

சீனா அமெரிக்கா உள்பட பல நாடுகளை மீண்டும் மிரட்டி வரும் ஒமிக்ரான் தொற்றின் மாறுமாடான   உருமாறிய பிஎப் 7  தொற்று அதிவேகமாக பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வகை வைரஸ் பரவல்  இந்தியாவில் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்,  சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்பட வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு விமான நிலையத்தில் கொரோனா சோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  மேலும், மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும், கொரோனா பரிசோதனைகளை, தடுப்பூசிகள் செலுத்துவதை தீவிரமாக செயல்படுத்த வேண்டியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்தியஅரசின் நடவடிக்கையைத் தொடர்ந்து,   கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சுகாதாரத் துறை அதிகாரிகள், கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து,  மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, “பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி, திரையரங்கம், குளிரூட்டப்பட்ட அறைகள் உட்பட உள் அரங்குகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

மெட்ரோ ரயில், பேருந்து ஆகியவற்றிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சளி, காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைவரும் தவறாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

புத்தாண்டை பொதுமக்கள் உரிய கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும்

பப்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் முக்கவசம் அணிவது கட்டாயம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.