பெங்களூரு :

வாடகைக்கு குடியிருப்போர் வாடகை செலுத்த மூன்று மாதங்களுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

ட்விட்டர் மூலம் இந்த கோரிக்கையை வைத்திருக்கும் குமாரசுவாமி, பல்வேறு நாடுகளில் இது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது வாடகைக்கு குடியிருப்போருக்கு ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதே போன்று, இந்தியாவிலும் வாடகை செலுத்துவதற்கு சலுகை காட்டவேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக வெளியிடவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போர் மற்றும் அரசு, அரசுத்துறை நிலங்களில் வாடகைக்கு தொழில் நடத்துவோர் என்று ஏராளமானோர் இதனால் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு வாடகை இழப்பை சந்திக்க நேரிடும் மக்களுக்கு வரிசெலுத்துவதில் சலுகை காட்டப்படுமா என்பது குமாரஸ்வாமியின் இந்த கோரிக்கையில் உள்ளதா என்று தெரியவில்லை.