டெல்லி:

ர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதால் கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை கவனித்தில் கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் தெரிவித்திருந்த நிலையில், தீர்ப்பில் எடியூரப்பா பதவிக்கு ஆபத்து வரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக தொகுதிகளை வென்ற பாஜகவை ஆட்சி அமைக்க கவர்னர் அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்று, பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலையில், பதவி விலகினார்.

இதைத்தொடர்ந்து, குமாரசாமி தலைமையில், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி பதவி ஒதுக்கப்பட்டது. இந்த கூட்டணி அரசை கலைக்க பாஜக ஆபரேசன் தாமரை என்ற பெயரில் மாற்றுக்கட்சி எம்எல்ஏக்களுக்கு வலைவீசி வந்தது.

சுமார் 14 மாதங்கள் தாக்குப்பிடித்து குமாரசாமி ஆட்சி நடத்தி வந்த நிலையில்,  கூட்டணி கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகாததால், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது.

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட  17 பேரும் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி இறுதி விசாரணை நடைபெற்றதுடன் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், கர்நாடகாவில்  காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள வழக்கில் வருகிற வருகிற 13-ந் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. .இதற்கிடையில் எடியூரப்பாவின் ஆடியோ விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை காங்கிரஸ் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளனர். அதை கவனத்தில் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ள நிலையில், இன்று ‘17 தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்படுகிறது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.