மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழக அரசிடம் முறையிடுவேன் தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார்.
விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என்றும் இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
டி.கே. சிவகுமாரின் இந்த அறிக்கைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அண்டை மாநிலத்தை வம்புக்கு இழுப்பதாகவும் தெரிவித்தார்.
அதிகாரிகள் இன்னும் முழு விவரங்களையும் டி.கே. சிவகுமாரிடம் அளிக்கவில்லை என தெரிகிறது என்றும் இந்த விவகாரத்தில் எப்படி நடந்துகொள்வது என்று அவருக்கு தெரியவில்லை என்றும் காட்டமாக கூறினார்.
காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மேகதாது அணை கட்டுவது குறித்து எந்த குறிப்பும் இல்லை என்பதை டி.கே.சி-க்கு நினைவூட்டுகிறேன்.
இந்த திட்டமோ அல்லது வேறு எந்த அங்கீகாரமற்ற கட்டுமானமோ தமிழகத்தின் நலன்களை கடுமையாக பாதிக்கும். எனவே தமிழகத்தின் உரிமையான முறைப்படுத்தப்படாத இடைநிலை நீர்ப்பிடிப்பு பகுதியான மேகதாது அணையை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கது அல்ல. மேகதாது நீர்த்தேக்கம் கட்ட கர்நாடகா முன்வந்தால், தமிழகம் அனைத்து மட்டங்களிலும் எதிர்க்கும் என எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய டி.கே. சிவக்குமார் “மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழக அரசிடம் முறையிடுவேன் தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை” என்று தெரிவித்துள்ளார்.