சென்னை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் வி கங்காபூர்வாலா குறைகளுடன் வருவோருக்கு தமது கதவுகள் திறந்தே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி  ஓய்வு பெற்றார். அதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதையொட்டி மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ௨௪ ஆம் தேதி அன்று டி.ராஜாவும் பணி ஓய்வு பெற்றார். இதை அடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகக் குடியரசுத்தலைவர் நியமித்தார்.  சனிக்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலா பதவியேற்றுக் கொண்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கங்காபூர்வாலா, சென்னை உயர்நீதிமன்றத்தின் 33ஆவது தலைமை நீதிபதி ஆவார்.

இன்று அவர் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தில் (பார் கவுன்சில்) நடந்த வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார்.  அப்போது நீதிபதி கங்காபூர்வாலா, “நான் எனது சகோதர சகோதரிகளான சக நீதிபதிகளுடன் பணி புரிவதில் பெருமை அடைகிறேன்.  எனது கதவுகள் எப்போதுமே குறைகளுடன் வருவோருக்காக திறந்து இருக்கும்”எனத் தெரிவித்துள்ளார்.