பெங்களூரு:

ர்நாடகாவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் குழப்பம் காரணமாக, கர்நாடக சட்டமன்றம் அமைந்துள்ள  பெங்களூரு விதானசவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

குமாரசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக 16 எம்எல்எக்கள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், அங்கு அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக விதான சவுதா பகுதியில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விதான சவுதாவை மற்றும் அதை சுற்றி உள்ள 2 கி.மீ சுற்றளவுக்கு  ஜூலை 15-ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் ஆலோக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூரு விதானசவுதா வில் உள்ள சட்டப்பேரவையில் ஜூலை 12-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் அங்குள்ள அரசியல் நிலவரம் காரணமாக  விதானசௌதா வளாகத்தில் தா்னா உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெறக்கூடும். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு ஜூலை 15-ம் தேதி காலை 6 மணி முதல் 20-ம் தேதி இரவு 12 மணிவரை விதானசௌதாவை சுற்றியுள்ள 2 கி.மீ பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவின் போது அப்பகுதியில் போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 11ந்தேதி 14ந்தேதி வரை 144 தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 நாட்களுக்கு 144 விதிக்கப்பட்டு உள்ளது.